''சங்கரன்கோவில் திமுக MLA ராஜா ஒழிக''! திமுக பெண் கவுன்சிலர் சாபம்! சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு!

தென்காசி: தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சங்கரன்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான ஈ.ராஜாவை கண்டித்து திமுக மாவட்ட பெண் கவுன்சிலர் கனிமொழி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வியும் மற்றும் ராஜா எம்.எல்.ஏ.வும் தனது வார்டுக்கு மட்டும் நிதி ஒதுக்க மறுப்பதாகவும் நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதாகவும் கவுன்சிலர் கனிமொழி குற்றஞ்சாட்டியதோடு அவர்கள் இருவரையும் ஒழிக என சாபமும் விட்டார்.

தர்ணாவில் ஈடுபட்டு தொடர்ச்சியாக முழக்கங்கள் எழுப்பியதால் ஒரு கட்டத்தில் மயக்கமடைந்த கவுன்சிலர் கனிமொழி மாவட்ட ஆட்சியர் சேம்பர் அருகே மயங்கி விழுந்தார். அங்கிருந்த காவலர்களும், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களும் கவுன்சிலர் கனிமொழியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தனது வார்டுக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை என்பதும் அதற்கு பின்னணியில் இருப்பவர் ராஜா எம்.எல்.ஏ. என்பதும் கவுன்சிலர் கனிமொழியின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனிடையே தென்காசி வடக்கு மாவட்ட திமுகவில் நிலவும் கோஷ்டிப்பூசலை இந்த நிகழ்வு படம் பிடித்துக் காட்டியிருக்கிறது.

கவுன்சிலர் கனிமொழியை போலவே மற்றொரு மாவட்ட கவுன்சிலரான சாக்ரடீஸ் என்பவரும் தனது வார்டுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் எந்தப் பணியும் மேற்கொள்ள முடியவில்லை எனக் கூறி தர்ணா செய்தார். இந்த விவகாரம் தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் இரு தரப்பையும் அழைத்துப் பேசி பிரச்சனைக்கு தீர்வு காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தர்ணாவில் ஈடுபட்ட 2 கவுன்சிலர்களும் உள்நோக்கத்தோடு தன் மீது புகார் கூறுவதாக தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ் செல்வி கூறியிருக்கிறார். இதனிடையே தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜாவை தொடர்பு கொண்டு நாம் விளக்கம் அறிய முயன்ற போது, ”அண்ணன்” மீட்டிங்கில் இருப்பதாக அவரது உதவியாளர் தெரிவித்தார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.