12 வருடங்களுக்கு பின் உயர்ந்த மஞ்சள் விலை… ஆனாலும் விவசாயிகளுக்கு பயன் இல்லை!

தமிழகத்தில் 1.60 லட்சம் ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. அதில் 30 சதவீதத்துக்கு மேல் ஈரோடு மாவட்டத்தில் பயிரிடப்படுகிறது. இந்தியாவைப் பொருத்தவரை தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத், மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலி, தமிழகத்தில் ஈரோடு என இந்தியாவில் 3 இடங்களில்தான் தேசிய அளவில் தரமான மஞ்சள் சந்தை உள்ளது.

மஞ்சள் வயல்

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் மகாராஷ்டிர மாநிலம், சாங்கிலி, பஸ்மத், நான்தேட், போக்கா், ஹிங்கோலி ஆகிய பகுதிகளில் மஞ்சள் சாகுபடி சுமாா் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் விரிவடைந்துள்ளது. தமிழகத்தில் இருந்து விதை மஞ்சளை வாங்கிச் சென்று அங்கு நடவு செய்திருப்பதால் அதன் தரம், நிறம், சுவையில் குறை சொல்ல முடியாது. விலையும் குறைவு என்பதால், அந்த மாநில மஞ்சள் நுகா்வு அதிகரித்துள்ளதால் தமிழக மஞ்சளுக்கு மவுசு குறைந்து, விலையும் கிடைக்கவில்லை. மகாராஷ்டிர மாநிலத்தில் அறுவடையின்போது பெய்த கன மழையால் மஞ்சள் பயிா் தண்ணீரில் மூழ்கியது.

இதனால் இந்த ஆண்டு அங்குள்ள சந்தைகளுக்கு தரமான மஞ்சள் வரவில்லை. இதனையடுத்து ஈரோடு மஞ்சளுக்கு தேவை அதிகரித்து இப்போது குவிண்டால் ரூ.13,000க்கும் மேல் விற்பனையாகிறது. இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்கச் செயலாளா் எம்.சத்தியமூா்த்தி கூறியதாவது, “12 ஆண்டுகளுக்கு பிறகு குவிண்டால் ரூ.13,000-க்கு மேல் விற்பனையாகிறது. அதே சமயத்தில் பழைய மஞ்சள் குவிண்டால் ரூ.9,000 வரை விற்பனையாகிறது. போதிய தரம் இல்லாததால் பழைய மஞ்சளுக்கு விலை கிடைக்கவில்லை. கடந்த 12 ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்தில் சுமாா் 3 லட்சம் மூட்டைகள் மஞ்சள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

மஞ்சள்

கடந்த ஆண்டை காட்டிலும் இப்போது பழைய மஞ்சள் குவிண்டால் ரூ.2,000 வரை விலை உயா்ந்துள்ளது. ஆனால் இன்னும் விலை உயரலாம் என்ற எதிா்பாா்ப்பில் விவசாயிகள் மஞ்சளை இருப்பு வைத்துள்ளனா். இருப்பு வைக்கப்படும் மஞ்சளின் தரம் கண்டிப்பாக குறையும் என்பதால் எந்த காலத்திலும் புதிய மஞ்சளுக்கு இணையான விலை கிடைக்காது. இதனை விவசாயிகள் உணர வேண்டும்” என கூறியுள்ளார்.

12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மஞ்சள் விலை உயா்ந்துள்ள நிலையில் இப்போது விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்ய ஆா்வம் காட்டுகின்றனா். ஆனால் மஞ்சள் சாகுபடிக்கு தகுதியான நிலங்களில் ஏற்கெனவே கரும்பு, மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றை சாகுபடி செய்துள்ளதால் மஞ்சள் சாகுபடி செய்ய இயலாத நிலை உள்ளது. மேலும் ஏப்ரல் மாதத்திலேயே அறுவடை முடிந்து மஞ்சள் வேகவைக்கப்பட்டு விட்டதால் விதை மஞ்சள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.