மழையால் இந்தியாவுக்கு வந்த இழப்பு… முதலிடத்தை வசமாய் பிடித்த பாகிஸ்தான்!

WTC Points Table 2023-25: 2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதி, ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன்மூலம், 2019-21 சைக்கிளின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் இந்திய அணி, நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. எனவே, முதலிரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்களிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறி ஏமாற்றத்தை சந்தித்த இந்திய அணிக்கு, இந்த மூன்றாவது சைக்கிளில் (2023-25) மிகப்பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. 

இந்திய அணிக்கு இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மேற்கு இந்திய தீவுகள் அணியுடன் ஆரம்பித்தது. குறிப்பாக, ஆஸ்திரேலியாவுடனான இறுதிப்போட்டிக்கு பின் சிறிது ஓய்வெடுத்து, இந்திய அணி இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது. அதன்படி, மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்றெடுத்தது. தொடர்ந்து, இரண்டாவது போட்டியின் மீதும் எதிர்பார்ப்பு இருந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் இந்தியா 438 ரன்களுக்கும், மே.இ. தீவுகள் 255 ரன்களுக்கும் ஆல்-அவுட்டானது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் விளையாடிய இந்தியா விரைவாக ரன்களை குவித்து நான்காவது நாளில் டிக்ளர் செய்தது. மேலும், மே.இ. தீவுகள் அணிக்கு 365 ரன்களை இலக்காகவும் நிர்ணயித்தது. நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் மே. இ. தீவுகள் 76 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 

இதனையடுத்து, ஒரே நாளில் 289 ரன்களை எடுக்க வேண்டும் என நிலையில் மே.இ. தீவுகள் அணியும், 8 விக்கெட்டுகள் எடுத்தால் வெற்றி என இந்திய அணியும் காத்திருந்தனர். இருப்பினும், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால், மழை காரணமாக ஐந்தாம் நாள் ஒரு பந்து கூட வீசப்படவில்லை. இதனால், இரண்டாவது டெஸ்ட் போட்டி சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜ் ஆட்ட நாயகனார். 

இரண்டாவது போட்டி டிரானவதன் விளைவாக, சாத்தியமான 24 புள்ளிகளில் இருந்து இந்தியா 16 புள்ளிகளை மட்டுமே பெற முடிந்தது. இதன் மூரம் PCT (வெற்றி பெற்ற புள்ளிகளின் சதவீதம்) 66.67 சதவீதமாக இருந்தது. இதன் விளைவாக, அவர்கள் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2023-25 புள்ளிகள் அட்டவணையில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்று 100 சதவீதத்துடன் உள்ள பாகிஸ்தானுக்குப் பின்னால் இரண்டாவது இடத்தில் உள்ளனர். மறுபுறம், மேற்கிந்தியத் தீவுகள் தற்போது 4 புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இது அவர்களின் PCT ஐ 16.67 சதவீதத்திற்கு கொண்டு சென்றது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் முறையே 3ஆவது, 4ஆவது இடத்தில் உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.