2வது டி20 கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி…!

கயானா,

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்தியாவை 4 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி கயானாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக திலக் வர்மா 51 ரன்கள் சேர்த்தார்.

இதனை தொடர்ந்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தபோதும் நிகோலஸ் பூரன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 40 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 18.5 ஓவரில் 8 விக்கெட் இழந்து 155 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் இடையேயான 3வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.