ஆசிய கோப்பை: ஒரே ஓவரில் ரெக்கார்டு மன்னனாக மாறிய முகமது சிராஜ்

முகமது சிராஜ் அபாரம்

‘முகமது சிராஜ்… முகமது சிராஜ்..’ இது தான் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இன்றைய ஆரவார கொண்டாட்ட முழக்கம். ஆசிய கோப்பை இறுதிப்போட்டி நடைபெறும் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் மட்டுமல்ல… தொலைக்காட்சி, ஓடிடிக்களில் பார்க்கும் இந்திய ரசிகர்கள் உச்சரிக்கும் பெயரும் கூட. ஏனென்றால், பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே தொடங்கிய ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், இலங்கை அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஒரே ஒரு ஓவரில் மொத்தமாக அவுட்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பிவிட்டார் முகமது சிராஜ். ஒன்றல்ல.. இரண்டல்ல.. மொத்தம் 4 விக்கெட்டு கொத்தாக அள்ளிவிட்டார். இப்படியொரு இலங்கை அணியின் சரிவை இந்திய அணியின் வீரர்களே எதிர்பார்க்கவில்லை. 

விக்கெட்டுகளை அள்ளிய சிராஜ்

 (@CricCrazyJohns) September 17, 2023

ஆனால் அந்த மாயாஜால மந்திர பவுலிங்கிற்கு காரணம் சிராஜ். தொட்டதெல்லாம் பொன்னாகும் என்பதைப் போல அவர் வீசும் ஓவர்களில் எல்லாம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது. கேட்ச், போல்டு, கேட்ச் என அவரை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் களத்துக்கு எந்த இலங்கை வீரர்கள் உடனே பெவிலியனுக்கு படையெடுத்து சென்று கொண்டே இருந்தனர். யாராவது இந்த காட்டாற்று வெள்ளத்துக்கு அணை போடுவார்களா? என பார்த்தால், அதற்கு கொஞ்சமும் வழி கொடுக்காமல் பந்து வீச்சில் பின்னி பெடலெடுத்துவிட்டார் சிராஜ். இதனால் பல சாதனைகளையும் அவர் வசம் கொண்டு வந்துவிட்டார்.

மேலும்படிக்க | IND vs SL: ஒரே ஓவரில் 4 விக்கெட்… இலங்கையை சரித்த சிராஜ் – கோப்பையை நோக்கி இந்தியா

முகமது சிராஜ் ரெக்கார்டு

 (@CricCrazyJohns) September 17, 2023

முதன்முறையாக இந்திய பவுலர் ஒருவர் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். அந்த சாதனை சிராஜ் வசம் வந்திருக்கிறது. ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர். குறைந்த பந்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சமிந்தா வாஸூடன் இணைந்துள்ளார். அவர் 16 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அவரைப் போலவே முகமது சிராஜூம் 16 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். மேலும், இந்த சாதனையையும் செய்திருக்கும் முதல் இந்தியர் சிராஜ் தான். 

சிராஜின் சிறந்து பந்துவீச்சு

6 ஓவர்களில் 1 ஓவர் மெய்டன் வீசி 13 ரன்கள் மட்டுமே விடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் சிராஜ். இது ஒருநாள் போட்டியில் அவருடைய சிறந்த பந்துவீச்சாக இடம்பெற்றுள்ளது. மேலும், ஆசிய கோப்பை இறுதிப் போட்டியிலும் சிறந்த பந்துவீச்சுகளில் ஒன்றாக சிராஜின் ஸ்பெல் பதிவாகியிருக்கிறது. அவரின் இந்த ஆக்ரோஷமான பந்துவீச்சில் இருந்து இலங்கை அணி இறுதிவரை மீளவே முடியவில்லை. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.