ஏன் இந்த சிறப்பு கவனிப்பு..? இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டத்துக்கு எதிராக டிரெண்டாகும் ஹேஷ்டேக்

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் என்றாலே எப்போதும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். அந்த வகையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை இந்தியா – பாகிஸ்தான் மோதும் ஆட்டமும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த ஆட்டத்தை சிறப்பிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர்களான அரிஜித் சிங், சங்கர் மகாதேவன் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, நாளை நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என ரசிகர்களில் ஒரு பிரிவினர் சமூக வலைத்தளத்தில் #BoycottIndoPakMatch #ShameOnBCCI ஆகிய ஹேஷ்டேக்குகளை டிரெண்டாக்கி வருகின்றனர். இந்தியா-பாகிஸ்தான் உறவில் ஏற்பட்ட விரிசலுக்கு மத்தியில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இங்கு ராஜ மரியாதையுடன் வரவேற்பு அளித்து விளையாட வைப்பதும், அவர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதும் சரியானதல்ல என்று பலரும் கருத்துகளை பதிவிட்டவண்ணம் உள்ளனர்.

அத்துடன் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் தாக்குதலால் ஏற்பட்ட சேதம், உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் இறுதிச்சடங்கு மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கதறி அழும் காட்சிகளை பகிர்ந்துள்ளனர்.

‘பாகிஸ்தான் அணிக்கு ஏன் தேவையற்ற சிறப்பு கவனிப்பு மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் செய்கிறீர்கள்? இது பிசிசிஐக்கு அவமானம்’ என ஒரு பயனர் சாடியிருக்கிறார்.

ஒருபுறம் நமது ராணுவ வீரர்களை உயிர்த்தியாகம் செய்ய சொல்லிவிட்டு, மறுபுறம் ஆட்டம் போட்டுக் கொண்டாடுவது என்பது நகைச்சுவை அல்லவா? இந்த ஆட்டத்தை புறக்கணிக்கிறேன், என ஒருவர் கூறியுள்ளார்.

பிசிசிஐயால் இதை எப்படி செய்ய முடிகிறது? பிசிசிஐயும், ஜெய் ஷாவும் பாகிஸ்தான் அணியை கவுரவிக்கும் வகையில் நடந்துகொண்டதை சகித்துக் கொள்ளவே முடியவில்லை. எல்லையில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு எதிராக நமது வீரர்கள் தைரியமாக போராடி வருகின்றனர் என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.