நாங்குநேரி சம்பவம்: குணமடைந்து வீடு திரும்பிய மாணவர்கள்; நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி!

கடந்த ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரையும் அவரின் சகோதரியும் சக மாணவர்களாலேயே தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொடூர தாக்குதலில் பலத்த காயமடைந்த இருவரும், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்றுதான் வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், மாணவர்கள் இருவரின் மொத்த படிப்பு செலவையும் ஏற்றிருக்கும் அரசு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யும் ஆணையையும் வழங்கியிருக்கிறது.

மாணவர் சின்னதுரை குடும்பம் – உதயநிதி ஸ்டாலின்

மேலும், அங்கான்வாடி மையத்தில் பணியாற்றி வந்த சின்னைத்துரையின் அம்மா அம்பிகா, திருநெல்வேலி, ரெட்டியார்பட்டியில் பணியாற்றிடும் வகையில், அவருக்கு பணியிட மாற்றத்தையும் வழங்கியிருக்கிறது. இது தொடர்பான ஆணைகளை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்தினரைச் சந்தித்து, அவர்களிடம் வழங்கினார்.

இது தொடர்பாக மாணவர் சின்னதுரையின் தாயார் அம்பிகாவிடம் பேசினோம். நம்மிடம் அவர், “நேத்துதான் ஆஸ்பத்திரித்தில இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்தோம். இரண்டு பேருக்கும் இப்போ உடம்பு பரவாயில்ல. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் வீட்டுக்கான பட்டாவையும், பிள்ளைங்க படிப்புக்கான மொத்த செலவையும் அரசு ஏத்துக்கிட்டதா சொன்னாங்க, அது ரொம்ப ஆறுதலா இருந்துச்சு.

வீடு எங்களுக்கு போதுமானதா இருக்கு. எனக்கும் வேலையை ரெட்டியார்பட்டிக்கு மாத்திட்டாங்க. இனி எந்தப் பிரச்னையும் இல்ல, பிள்ளைங்க நல்லா படிக்கணும். படிச்சு பெரிய ஆளா வரணும், அதுதான் என்னோட ஆசை.

இந்த மாதிரி ஒரு சம்பவம் இனி எங்கேயும் நடக்கக் கூடாது. எங்க கஷ்டகாலம் முடிஞ்சிட்டு. எங்களுக்காக நிறைய பேரு பேசிருக்காங்க, வந்து ஹெல்ப் பண்ணிருக்காங்க. அவங்களுக்குத்தான் நன்றி சொல்லணும். அரசாங்கத்துக்கும் ரொம்ப நன்றி” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.