புனரமைக்கப்பட்ட ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது

இயல்பான திறமைகளைக் கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான சம வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட “தேசிய கிரிக்கெட் அபிவிருத்திப் பாதை ” எனும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக தம்புள்ள மைதானத்தில் நிறுவப்பட்ட ‘தனித்துவ மையம்’ (05) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து, தனித்துவ மையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார். இதன் கீழ் நீர் சிகிச்சைப் பிரிவு மற்றும் விளையாட்டு காயங்களை குணப்படுத்தும் புதிய மருத்துவ பிரிவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

அதன் பின்னர், தம்புள்ள விளையாட்டரங்கில் நிறுவப்பட்டுள்ள புதிய சர்வதேச தரத்திலான நீச்சல் தடாகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, நீச்சல் தடாகத்தின் செயற்பாடுகளையும் அவதானித்தார்.

இந்த பிரிவுகளுக்கு மேலதிகமாக, விளையாட்டு வீரர்கள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடிய உள்ளக கிரிக்கெட் மைதானம், புதிய ஊடக மையம் மற்றும் பிரதான கேட்போர் கூடம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்விலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்.

இதேவேளை, சர்வதேச தரத்திற்கு ஏற்ப நவீனப்படுத்தப்பட்டுள்ள ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அதிநவீன LED ஒளிவிளக்குக் கட்டமைப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்து வைத்தார்.

மேலும் இங்கு பல கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ,டிரான் அலஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் முன்னாள் விளையாட்டு அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, கிரிக்கெட் நிறுவனத் தலைவர் சம்மி சில்வா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.