ரஷ்யா – உக்ரைன் யுத்த களத்தில் போரிட கட்டாயப்படுத்தப்படும் இந்தியர்கள்

மாஸ்கோ: ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போரில் போரிட இந்தியர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய ராணுவம் சார்பில் ‘ராணுவ உதவியாளர்கள்’ என பணியமர்த்தப்பட்ட இந்தியர்கள் எல்லைப் பகுதியில் துப்பாக்கி ஏந்தி போரிட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளனர்.

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கியது. இதில் உக்ரைன் ராணுவத்துக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளை சேர்ந்த தன்னார்வலர்கள், உக்ரைனின் பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச படையில் அங்கம் வகித்து வருகின்றனர். இந்நிலையில், ரஷ்ய தரப்பில் இந்தியர்கள் சிலர் எல்லையில் போரிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் உத்தர பிரதேசம், குஜராத், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் பகுதியை சேர்ந்தவர்கள்.

ஆயுதம் மற்றும் வெடிமருந்து பயன்பாடு குறித்த அடிப்படை பயிற்சியை ரஷ்ய ராணுவம் தங்களுக்கு வழங்கி, உக்ரைன் நாட்டை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியான Rostov-on-Don பகுதியில் உள்ள முகாமில் கடந்த ஜனவரி மாதம் முதல் பணியமர்த்தி உள்ளதாக பாதிக்கப்பட்ட இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

2023 நவம்பரில் ரஷ்யா சென்ற இந்தியர்கள் ராணுவ உதவியாளர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாதம் ரூ.1.95 லட்சம் ஊதியம் மற்றும் ரூ.50,000 போனஸ் என அவர்களிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருந்தும் முதல் இரண்டு மாதத்துக்கான ரூ.50,000 போனஸ் மட்டும் அவர்கள் பெற்றுள்ளனர். ‘பாபா வி-லாக்ஸ்’ எனும் யூடியூப் சேனல் நடத்தி வரும் ஃபைசல் கான் மூலம் அவர்கள் ரஷ்யா வந்துள்ளனர். அவர்களை ரஷ்யாவில் வரவேற்றதும் ஃபைசலின் சார்பாக வந்திருந்த இரண்டு இந்திய முகவர்கள்தான்.

கடந்த ஆண்டு நவம்பர் 13-ம் தேதி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து சுமார் இரண்டரை மணி நேர பயணத்துக்கு பிறகு ராணுவ முகாம் ஒன்றுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். உதவியாளர்களாக தான் பணி என இந்திய முகவர்கள் அவர்களிடத்தில் உறுதி அளித்துள்ளனர். அங்கு தங்கியிருந்த அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜனவரி 4-ம் தேதி அன்று அவர்கள் எல்லைப் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அப்போது முதல் அவர்கள் அங்கேயே இருந்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட இந்தியர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். இருந்தும் அவரை பிடித்த ரஷ்ய படையினர், மிரட்டல் கொடுத்து போரிட சொல்லி பணித்துள்ளனர். ‘5 மீட்டர் இடைவெளி விட்டு நடந்தால் குண்டு தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என ராணுவ அதிகாரி சொல்வார். நாங்களும் அப்படியே நடந்தோம். எங்களுக்கு வழிகாட்டியாக வந்த உள்ளூரை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அதை பார்த்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். கடந்த ஜனவரி 22-ம் தேதி யுத்தக் களத்தில் இருந்து தப்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். எனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறேன். உதவிக்காக இந்திய தூதரகத்தை அணுகினாலும் பலன் இல்லை’ என பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

“இந்தியர்கள் மட்டுமல்லாது மற்ற நாடுகளை சேர்ந்தவர்களும் எல்லையில் போரிட வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகி உள்ளனர். அவர்களது பாஸ்போர்ட் பறிக்கப்பட்டுள்ளது. அவர்களின் உயிர் அச்சுறுத்தலில் உள்ளது. ராணுவ உதவியாளர்கள் என சொல்லி ரஷ்ய படையினர் இப்படி செய்துள்ளனர்” என்கிறார் ரஷ்யாவில் உள்ள முகவர் (ஏஜெண்ட்) ஒருவர்.

இந்த புகார் குறித்து முறையாக ஃபாலோ செய்து வருவதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசதுத்தீன் ஒவைசி, ரஷ்யாவில் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்கள் நாடு திரும்ப அரசு உதவ வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சரிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார். பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் அவரை அணுகியதாகவும் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.