Procrastination in formation of government in Pakistan | பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தேர்தல் முடிந்து 12 நாட்களாகியும் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்பது குறித்து தெளிவு இன்றி இழுபறி நீடிக்கிறது.

அந்நாட்டில் பிப்., 8ல் நடந்த பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பார்லிமென்டில் மொத்தமுள்ள 336 இடங்களில் 266ல் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவை. மீதமுள்ள 70 இடங்கள் வெற்றி பெற்ற கட்சிகளின் பெரும்பான்மைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஆட்சியமைக்க ஒட்டுமொத்தமாக 169 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

மக்களால் தேர்ந்தெடுக்கவேண்டிய 266 உறுப்பினர்கள் பதவிகளில் 265 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்ததால் தேர்தல் நடக்கவில்லை. 133 இடங்களைக் கைப்பற்றினால் ஆட்சியமைக்கலாம். எந்த கட்சியும் அந்த இலக்கை எட்டவில்லை.

சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் -தெஹ்ரீக்- இன்சாப் (பி.டி.ஐ.) ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 93 இடங்களில் வெற்றி பெற்றனர். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) 75 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன. முத்தாகிதா குவாமி இயக்கம் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இம்ரான் கான் ஆதரவாளர்கள் அதிக அளவில் வென்ற போதும், அவர்களால் ஆட்சியமைக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் ஆட்சியமைப்பதற்காக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கூட்டணி அமைத்தன. ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கிறது. பிரதமர் பதவி, அமைச்சர்கள், அதிகாரப் பகிர்வு குறித்து இரு கட்சிகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீபும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோவும் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்தனர்.

பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தியும், பிரதமர் பதவி மற்றும் அதிகாரப்பகிர்வு குறித்த திட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

நேற்று முன் தினம் மாலையில் 5ம் சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. பாகிஸ்தான் முஸ்லீம் லீக்- நவாஸ் கட்சி மூத்த தலைவரும் செனட்டருமான இஷாக் தாரின் இல்லத்தில் நடந்த இக்கூட்டத்தில் இரு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் குழுவில் முராத் அலி ஷா, கமர் ஜமான் கைரா, நதீம் அப்சல் சான் மற்றும் பலர் இருந்தனர்.

மூன்று மணி நேரம் நடந்த இப்பேச்சுவார்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இரவு 10:00 மணிக்கு மீண்டும் கூடி விவாதிக்கலாம் என தற்காலிகமாக பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. ஆனால் இரவு 10:00 மணிக்கு கூட்டம் நடக்கவில்லை. அதன்பின் கூட்டம் நிறைவடைந்ததாக இரவு 11:00 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அடுத்த கூட்டம் இன்று துவங்கும் என தெரிவிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தாலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ, நவாஸ் கட்சியின் முயற்சியை பின் வாங்கச் செய்து, தான் பிரதமர் ஆவதற்காக புத்திசாலித்தனமாக காய்களை நகர்த்துவதாக தகவல் வெளியாகிறது. அதாவது இம்ரான் கான் ஆதரவு எம்.பி.க்கள் சன்னி இத்தேஹாத் கவுன்சிலில் இணைந்துள்ளனர். அவர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனென்றால் இம்ரான் கானின் பி.டி.ஐ. கட்சி பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவளிக்க வாய்ப்பு இல்லை என்று ஏற்கனவே கூறியிருக்கிறது.

பிப்., 29க்குள் புதிய அரசு நாடாளுமன்றத்தின் முதல் கூட்ட தொடரை கூட்ட வேண்டும். அதற்குள் அதிகாரப் பகிர்வு தொடர்பாக இரு முன்னணி கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படும் என நம்பப்படுகிறது.

முத்தாகிதா குவாமி இயக்கம் தனது ஆதரவை பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சிக்கு தெரிவித்திருக்கிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.