கவுதம் கம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பா.ஜ.க. எம்.பி. அரசியலில் இருந்து விலகல்

புதுடெல்லி,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் முன்னாள் மந்திரியும், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக் தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யுமான ஜெயந்த் சின்ஹா, வருகிற மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தனது விருப்பத்தை இன்று தெரிவித்துள்ளார். இவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் துணைத் தலைவரான யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஆவார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“பருவநிலை மாற்றம் தொடர்பாக பணியாற்றவுள்ளதால் அதில் முழுமையாக கவனம் செலுத்த அரசியலில் இருந்து விடுவிக்குமாறு பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை கேட்டு கொள்கிறேன். நிச்சயமாக, பொருளாதாரம் மற்றும் நிர்வாக விவகாரங்களில் கட்சியுடன் தொடர்ந்து பணியாற்றுவேன்.

கடந்த 10 ஆண்டுகளாக ஹசாரிபாக் மக்களுக்கு சேவை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. மேலும், எனக்கு கட்சியில் பல வாய்ப்புகளை அளித்த பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பா.ஜ.க.வினர் அனைவருக்கும் இந்த சமயத்தில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஜெய் ஹிந்த்”

இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.

முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பா.ஜ.க. மக்களவை உறுப்பினராக கவுதம் கம்பீர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.