Elephants: உடல்நலக்குறைவால் உயிரிழந்த தாய் யானை… பாசப் போராட்டம் நடத்திய குட்டி!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் புலி, யானை, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. சத்தியமங்கலம் வனச்சரகம், பண்ணாரி கோயில் அருகே, இரண்டு நாள்களுக்கு முன்தினம் இரவு, இரண்டு குட்டிகளுடன் தாய் யானை வந்துள்ளது. உடல்நிலை சரியில்லாததால் அந்த தாய் யானை, வனத்தில் மயங்கி விழுந்தது. அதன் குட்டி யானைகள், தாய் யானையைச் சுற்றி வந்து பிளிறியபடி இருந்தன.

குட்டி யானை

இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், “சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் மார்ச் 3-ஆம் தேதி மாலை, உடல் நலக் குறைவால் பெண் யானை ஒன்று நடக்க முடியாமல் படுத்த நிலையில் இருந்தது தெரியவந்தது. அதன் அருகில் 2 மாத குட்டி யானை, 5 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பிளிறியபடி இருந்தது.

உடல்நிலை மோசமான நிலையில் இருந்த தாய் யானையால் நகர முடியவில்லை. வனத்துறை மருத்துவக் குழுவினரால் தாய் யானைக்கு அவசர சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஆண் குட்டி யானை தாய் யானை பக்கம் வரவிடாமல் பிளிறியபடி இருந்ததால், அதை தாயிடம் இருந்து பிரிந்து அதன் கூட்டத்துடன் சேர்க்கப்பட்டது.

சிகிச்சை

தொடர்ந்து, நோய்வாய்ப்பட்ட தாய் யானைக்கும், 2 மாத குட்டி யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குட்டி யானை சாலைப் பகுதிக்குச் சென்று, வாகனத்தில் அடிபட்டு விடக் கூடாது என்பதற்காக, 5 அடி ஆழத்தில் குழி தோண்டி, அதில் குட்டி யானையை இறக்கி, பாதுகாக்கப்பட்டது. குட்டி யானைக்குத் தேவையான பால் மற்றும் நீர் வழங்கப்பட்டது. தாய் யானையை பிரிய முடியாமல், குட்டி யானை பாசப் போராட்டம் நடத்தியது.

தாய் யானை உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற முடிவுக்கு கால்நடை மருத்துவக் குழுவினர் வந்ததையடுத்து, குட்டி யானை அதன் கூட்டத்துடன் சேர்ப்பதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன. இதற்காக ஆனைமலை மற்றும் முதுமலை யானைகள் முகாமில் இருந்து, அனுபவம் வாய்ந்த வனத் துறை ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர்.

குட்டி யானை

திங்கள்கிழமை இரவு முதல் ட்ரோன்கள் மற்றும் நைட் விஷன் கேமராக்களின் உதவியுடன் குட்டி யானையின் கூட்டத்தை கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து முயற்சித்ததில் அதன் கூட்டம் கண்டறியப்பட்டது. அதில், பாலூட்டும் பெண் யானை இருப்பதை உறுதிசெய்த பிறகு, அந்தக் கூட்டத்துடன் குட்டி யானை சேர்க்கப்பட்டது. தொடர்ச்சியாக வனத் துறை ஊழியர்கள் மூலம் குட்டி யானை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்றனர்.

இரண்டு நாள்களாக தாய் யானையின் அருகிலேயே அதன் 2 மாத குட்டி யானை,சுற்றி வந்து பாசப் போராட்டம் நடத்தி வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.