Electoral Bond: `பாஜக-வுக்கு மட்டும் எப்படி ரூ.6,000 கோடி… சிறப்பு விசாரணை வேண்டும்!' – கார்கே

உச்ச நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவுக்குப் பின் மார்ச் 12-ம் தேதி, 2019 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி வரை விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்களின் தரவுகளை இந்திய தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ சமர்ப்பித்தது. அதைத் தொடர்ந்து, எஸ்.பி.ஐ அளித்த தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் நேற்றிரவு 8 மணியளவில் தனது இணையதளப் பக்கத்தில் இரண்டு பட்டியலாகப் பதிவேற்றம் செய்தது. ஒரு பட்டியலில், எந்தெந்த நிறுவனங்கள்/தனிநபர் எந்தெந்த தேதிகளில் அவ்வளவு மதிப்பில் தேர்தல் பத்திரங்களைப் பெற்றிருக்கின்றனர் என்றும் மற்றொரு பட்டியலில் எந்ததெந்த அரசியல் கட்சிகள் எந்தெந்த தேதிகளில் எவ்வளவு மதிப்பில் தேர்தல் பத்திரங்களை நிதியாக மாற்றியிருக்கின்றன என்பதும் இடம்பெற்றிருக்கின்றன.

SBI – Electoral Bond

ஆனால், எந்தெந்த நிறுவனங்கள், எந்தெந்த அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுத்தன என்று எந்தவொரு குறிப்பும் இதில் இடம்பெறவில்லை. இத்தனைக்கும், எஸ்.பி.ஐ கொடுத்ததாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் இந்த தரவுகள் உண்மைதானா என்று உறுதிப்படுத்துமளவுக்கு சீரியல் எண்களோ, அதிகாரபூர்வ முத்திரையோ எதுவும் இடம்பெறவில்லை. இருப்பினும், இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் நிறுவனங்கள் இதில் வரும் தேதிக்கு முன் பின் அமலாக்கத்துறை ரெய்டுக்குள்ளானதாகவும், அதன் பிறகு ஒரு தேதியில் தேர்தல் பத்திரங்கள் வாங்கியதாகவும், அதன் பின்னர் பெரிய தொகையில் மத்திய அரசின் ஒப்பந்தங்களைப் பெற்றதாகவும் நேற்றிரவு முதல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

உதாரணமாக, இந்தப் பட்டியலில் ரூ.1,368 கோடியுடன் முதலிடத்தில் இருக்கும் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பி.ஆர் நிறுவனத்தின்மீது பணமோசடி வழக்கின்கீழ் அமலாக்கத்துறை பலமுறை ரெய்டு நடத்தி, கிட்டத்தட்ட ரூ.1,000 கோடிக்கு மேல் மதிப்புடைய சொத்துகளைப் பறிமுதல் செய்திருக்கிறது. அதேபோல் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் மேகா இன்ஜினீயரிங் என்ற நிறுவனம் ஏப்ரல் 11, 2023 தேதியில் மட்டும் 100 கோடிக்கு தேர்தல் பத்திரம் மூலம் நிதி கொடுத்திருக்கிறது. பின் ஒரே மாதத்தில் ரூபாய் 14,400 கோடி மதிப்பிலான சுரங்க சாலை கட்டுமான பணிக்கான ஒப்பந்தம் அந்த நிறுவனத்திற்கு மகாராஷ்டிரா அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோல, பல தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

Electoral Bond

மொத்தமாக, தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.6,060.5 கோடி பா.ஜ.க நிதி பெற்றிருக்கிறது. இது மொத்த தேர்தல் பத்திரங்கள் மதிப்பில் 47 சதவிகிதம். இரண்டாவது, மூன்றாவது இடங்களில், ரூ.1,609.6 கோடியுடன் திரிணாமுல் காங்கிரஸும், ரூ.1,421.9 கோடியுடன் காங்கிரஸும் இருக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை வளையங்களில் இருக்கும் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியளித்திருப்பதாகக் குறிப்பிட்டு, பா.ஜ.க எவ்வாறு ஆறாயிரம் கோடிக்கு மேல் நிதி பெற்றது என்பதில் சிறப்பு நடத்தவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “நானும் சாப்பிட மாட்டேன், பிறரையும் சாப்பிட விட மாட்டேன் என்கிறார் பிரதமர் மோடி. ஆனால், தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க பணம் சம்பாதித்ததை உச்ச நீதிமன்றம் இன்று அம்பலப்படுத்தியிருக்கிறது. தேர்தல் பத்திரங்களில் பா.ஜ.க-வுக்கு 50 சதவிகித நன்கொடைகள் கிடைத்திருப்பதாகவும், காங்கிரஸுக்கு 11 சதவிகிதம் மட்டுமே நன்கொடை கிடைத்திருப்பதாகவும் எஸ்.பி.ஐ தரவுகள் காட்டுகின்றன.

மல்லிகார்ஜுன கார்கே

வாக்காளர் அடிப்படையில் பார்த்தால் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு நாங்களாக இருக்கிறோம். பா.ஜ.க உட்பட பிற கட்சிகளெல்லாம் சேர்த்துதான் அந்த மற்ற இரண்டு பங்கு. அப்படியிருக்கும்போது, பா.ஜ.க எப்படி 50 சதவிகிதம் நன்கொடை பெற்றது. முதலாளிகளோ அல்லது பிற நிறுவனங்களோ எப்படி இத்தகைய நன்கொடைகளை வழங்க முடியும்… இதில் பல சந்தேகத்துக்குரிய நன்கொடையாளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் பிற ஏஜென்சிகளின் வழக்குகளில் சம்பந்தமிருக்கிறது.

பின்னர், அத்தகையவர்களுக்கு மோடியும், அவரது கட்சியும் தங்களுக்கு அதிக நன்கொடைகளை வழங்க அழுத்தம் கொடுத்திருக்கின்றனர். இல்லையெனில், பா.ஜ.க பெற்ற நன்கொடைக்கும், பிற கட்சிகள் பெற்ற நன்கொடைக்கும் இவ்வளவு பெரிய வித்தியாசம் இருக்காது. இன்னொருபக்கம், காங்கிரஸின் வங்கிக் கணக்கை (ரூ.300 கோடி) முடக்குமாறு வருமான வரித்துறை, பா.ஜ.க-வால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பா.ஜ.க-வும் நன்கொடை பெறுகிறது. நாங்களும் நன்கொடை பெறுகிறோம். ஆனால், பா.ஜ.க-வின் வங்கிக் கணக்கு செயல்படுகிறது, எங்களின் வங்கிக் கணக்கு முடக்கப்படுகிறது.

மோடி, அமித் ஷா

எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்கை முடக்கினால் தேர்தலில் எப்படி போட்டியிடுவது. இதில், சமமான தேர்தல் களம் எங்கிருக்கிறது… எனவே, இந்த விஷயத்தில் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும். அப்படியும் உண்மை வெளிவராவிட்டால் பா.ஜ.க-வின் வங்கிக் கணக்கையும் முடக்க வேண்டும். அவர்களுக்கு எதாவது பிரதிபலனாக நன்கொடை கிடைத்ததா, மிரட்டல் மூலம் நன்கொடை கிடைத்ததா அல்லது வழக்குகளை முடித்துவைப்பதாகக் கூறியதால் பணம் கிடைத்ததா என்பதைக் கண்டறிய சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.