Congress accuses BJP of election papers issue | தேர்தல் பத்திரங்கள் விவகாரம் பா.ஜ., மீது காங்., குற்றச்சாட்டு

புதுடில்லி தேர்தல் பத்திர விபரங்கள் வெளியாகி இருப்பதன் வாயிலாக, பா.ஜ.,வின் ஊழல் தந்திரங்கள் அம்பலமாகி உள்ளன’ என, காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.

இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று கூறியதாவது:

கடந்த 2019 முதல் இதுவரை, தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, 1,300 நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள், 6,000 கோடி ரூபாய் அளவுக்கு பா.ஜ.,வுக்கு நன்கொடை அளித்துள்ளனர். இதன் வாயிலாக, பா.ஜ.,வின் ஊழல் தந்திரங்கள் வெளிப்பட்டுஉள்ளன.

இதில், சில நிறுவனங்கள் பெரும் தொகை அளித்த சில நாட்களிலேயே மிகப் பெரிய அரசு ஒப்பந்த பணிகளை பெற்றுள்ளன.

இதில், ‘மேகா இன்ஜினியரிங் அண்டு இன்ப்ரா’ என்ற நிறுவனம், பத்திரங்கள் வாயிலாக மொத்தம், 800 கோடி ரூபாய் நன்கொடையை பா.ஜ.,வுக்கு அளித்துள்ளது.

இந்த நிறுவனத்துக்கு, 14,400 கோடி ரூபாய் மதிப்பிலான மஹாராஷ்டிராவின் தானே – போரிவாலி இரட்டை சுரங்க திட்டப்பணி வழங்கப்பட்டுள்ளது.

இதுபோல ஏராளமான நிறுவனங்கள் பலன் அடைந்துள்ளன. அதேபோல, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை வாயிலாக சோதனைக்கு உள்ளான சில நிறுவனங்கள், பெரும் தொகையை பா.ஜ.,வுக்கு நன்கொடையாக அளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன.

‘பியூச்சர் கேமிங் அண்டு ஹோட்டல்ஸ்’ என்ற நிறுவனத்தில், 2022, ஏப்., 2ல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதற்கு ஐந்து நாட்களுக்கு பின், அந்நிறுவனம், 100 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கி பா.ஜ.,வுக்கு அளித்து உள்ளது.

அது மட்டுமின்றி, எஸ்.பி.ஐ., அளித்த இந்த விபரங்களில், ஓராண்டுக்கான விபரங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.

அவர்கள் அளித்த தகவல்கள், 2019, ஏப்ரலில் இருந்து தான் துவங்குகிறது.

ஆனால், எஸ்.பி.ஐ.,யின் தேர்தல் பத்திர முதல் விற்பனை 2018, மார்ச்சில் துவங்கியது. அந்த ஓராண்டில், 2,500 பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அந்த விபரங்கள் மறைக்கப்பட்டது ஏன்?

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ”தேர்தல் பத்திர விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு குழு விசாரணை நடத்தப்பட வேண்டும். பா.ஜ.,வின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும்,” என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.