இன்ஸ்டாகிராம் வீடியோ எடுத்தபோது விபரீதம்…!! பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

காசியாபாத்,

சமூக ஊடகங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் ரீல் வெளியிடும் மோகம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்காக, வித வித ஆடைகளை அணிவது, ஒப்பனை செய்து கொள்வது என தங்களை தயார்படுத்தி கொண்டு வீடியோ எடுக்கின்றனர். வீடு, பூங்கா, பொது இடம் என எதனையும் விட்டு வைக்காமல் கிடைக்கிற இடங்களில் எல்லாம் வீடியோ எடுக்கின்றனர்.

எனினும், இதில் சில ஆபத்துகளும் ஏற்படுகின்றன. இதுபோன்ற சம்பவம் ஒன்று உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. காசியாபாத் நகரை சேர்ந்த சுஷ்மா என்ற பெண் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடுவதற்காக ரீல் ஒன்றை எடுக்க தயாரானார்.

இதற்காக மேக்-அப் எல்லாம் போட்டு தெரு ஒன்றின் நடுவே நடந்து வந்துள்ளார். ஆனால், சற்று நேரத்தில் நடுத்தெருவில் வர கூடிய சம்பவம் ஒன்று நடக்க போகிறது என அவர் உணரவில்லை.

அவர் உடையை சரி செய்தபடி மெல்ல நடந்து வரும்போது, பைக்கில் ஒருவர் எதிரே வருகிறார். இதனால், இடையூறு ஏற்படுத்த கூடாது என்பதற்காக, சுஷ்மா வழிவிடும் வகையில் சற்று ஒதுங்கி நடக்க தொடங்கினார். அப்போது, பைக்கில் வந்த நபர் அவரை நெருங்கினார்.

பைக்கில் விரைவாக வந்த நபர், சுஷ்மாவின் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்து விட்டு வந்த வேகத்தில் தப்பி சென்றார். இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த சுஷ்மா, ஏய் என சத்தம் கொடுத்து விட்டு, அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போய் நிற்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளிவந்து வைரலாகி வருகிறது. சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல வீடியோக்கள் பகிரப்பட்டு வரும் சூழலில், இந்த சம்பவம் வீடியோ எடுப்பவர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்து விட்டது.

இந்திராபுரம் நகர உதவி ஆணையாளர் சுதந்திர குமார் சிங் கூறும்போது, இந்த சம்பவம் நேற்று நடந்தது. இதுபற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த பெண் புகார் அளித்திருக்கிறார். வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய குற்றவாளியை தேடி வருகிறோம் என கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.