“தேர்தல் பத்திர விவகாரத்தால் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு” – நிர்மலா சீதாராமன் கணவர் கணிப்பு

பெங்களூரு: தேர்தல் பத்திர விவகாரம் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பிரபல பொருளாதார நிபுணரும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தி சேனல் ஒன்றுக்கு பரகலா பிரபாகர் அளித்த பேட்டியில், “தேர்தல் பத்திர விவகாரம் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். தேர்தல் பத்திர விவகாரம் இன்று இருப்பதைவிட அதிக வேகம் பெறும். தற்போது இருப்பதை விட அதிகளவில் பூதாகாரமாக இந்த விவகாரம் உருவெடுக்கும். பாஜக மற்றும் மத்திய அரசை கடந்து பொது மக்களிடம் அதிவேகமாக தேர்தல் பத்திர விவகாரம் சென்றடைய துவங்கிவிட்டது.

இது இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ஊழல், உலகிலேயே மிகப் பெரிய ஊழல் என்பதை மக்கள் அனைவரும் இப்போது புரிந்து கொண்டுள்ளனர். இந்தப் பிரச்சினையால், ஆளும் பாஜக அரசாங்கம் வாக்காளர்களால் கடுமையாகத் தண்டிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரான பரகலா பிரபாகர் ஓர் அரசியல் பொருளாதார நிபுணர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் படித்த இவர், ஆந்திர முதலமைச்சரின் தகவல் தொடர்பு ஆலோசகராக பணியாற்றி இருக்கிறார். இவரது மனைவி நிர்மலா சீதாராமன், பாஜகவில் மத்திய அமைச்சராக பதவி வகித்தாலும், பரகலா பிரபாகர் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவர். இதனால் தொடர்ந்து பாஜக குறித்து பேசிவருகிறார்.

மத்திய பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்து இவர் எழுதிய கட்டுரைகள் சமீபத்தில் தொகுக்கப்பட்டு, ‘The Crooked Timber of New India: Essays on a Republic in Crisis’ என்ற பெயரில் நூலாக வெளியானது. இந்தப் புத்தகம், மத்திய பாஜக ஆட்சி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.