அருணாச்சல் சட்டமன்றத் தேர்தல்: தற்போதைய முதல்வர் உட்பட 6 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!

அருணாச்சல பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 2 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. இதில், பா.ஜ.க 60 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 34 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 29 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. தேசியவாத காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், அருணாச்சல மக்கள் கட்சி (பிபிஏ) 2 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இந்த நிலையில், அடுத்தமாதம் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுவந்தது.

பிரதமர் மோடி

இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்று வரை, மாநிலத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகளில் முதல்வர் பெமா காண்டு உள்ளிட்ட பா.ஜ.க வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றனர். அவர்களை எதிர்த்து பிற கட்சியினர் உட்பட யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதனால் அவர்கள் 6 பேரும் போட்டியின்றி எம்.எல்.ஏ-க்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

மேலும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெற வரும் 30-ம் தேதி கடைசி நாள் என்பதால், இன்னும் தங்களின் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளதாக முதல்வர் பெமா காண்டு தெரிவித்துள்ளார்.

அருணாச்சலப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 2-ம் தேதியும், மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2019-ல் நடந்த தேர்தலில், 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பா.ஜ.க 41 இடங்களிலும், ஜே.டி.யு 7 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 5 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. பெரும்பான்மை பெற்ற பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.