“தங்கத் தமிழ்ச்செல்வன் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு சின்னத்தில் நிற்பதால் திமுகவினருக்கே குழப்பம்” – ஆர்.பி.உதயகுமார்

மதுரை: ”தங்கத் தமிழ்ச்செல்வன் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு சின்னத்தில் நிற்பதால் தேனி தொகுதியில் பொதுமக்கள் மட்டுமில்லாது, திமுக தொண்டர்களே குழப்பமாய் இருந்து வருகிறார்கள்” என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் வி.டி.நாராயணசாமியை ஆதரித்து மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் உள்ள அலங்காநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குமாரம், கல்லணை, அலங்காநல்லூர், வலசை, மேட்டுப்பட்டி, பெரியஊர்சேரி, தேவசேரி, சேந்தமங்கலம், வடுகபட்டி, அய்யங்கோட்டை, பாலமேடு, வலையபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பிரச்சாரம் செய்தார்.

அப்போது ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், ”சுயேச்சையாக போட்டியிடுகிற ஒருவர் தேர்தல் ஆணையத்துக்கு மனு போட்டார். அதனை மண்ணை கவ்வும் வகையில் அதிமுக வெற்றி வேட்பாளர்களுக்கு பொதுச் செயலாளர் கே.பழனிசாமி கையெழுத்து இடலாம் என்ற அனுமதி வழங்கி, இரட்டை இலைக்கு தடையில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தேனியில் போட்டியிடும் நாராயணசாமி சாதாரண தொண்டர். கடந்த முறை, மற்றவர்களுக்கு வாக்குசேகரிக்க வந்தவர் தற்போது வேட்பாளராகியுள்ளார். இந்த அதிசயம் எல்லாம் அதிமுகவில் மட்டுமே நடக்கும். தேனி தொகுதி வெற்றி மூலம் நாராயணசாமி, ராசியான சாமி ஆகப்போகிறார்.

இரட்டை இலையால் வாழ்வு பெற்றவர்கள், அடையாளம் பெற்றவர்கள் எல்லாம் இன்றைக்கு இரட்டை இலையை எதிர்த்து நிற்கிறார்கள். அவர்களுக்கு அதிமுக தொண்டர்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்தில் நின்றபோது மக்கள் வரவேற்றார்கள். தற்போது குக்கரை தூக்கிக் கொண்டு செல்கிறார். ஆனால், மக்கள் இரட்டை இலைக்கு ஓட்டு போட குக்கரை எடுத்து வந்துள்ளார் என்று மக்கள் நினைக்கிறார்கள்.

தங்கத் தமிழ்ச்செல்வன் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு சின்னத்தில் நிற்ப்பதால் மக்கள் மட்டுமில்லாது திமுக தொண்டர்களே அங்கு குழப்பமாய் இருந்து வருகிறார்கள். தேனி தொகுதியில் நிச்சயம் திமுக தோல்வியடையும். அமைச்சர் பி.மூர்த்தி சொன்னதுபோல் ராஜினாமா செய்வார் என நம்புகிறேன். அதற்காக பி.மூர்த்தி தேர்தல் வரை காத்திருக்க வேண்டாம். இப்போதே முடிவெடுக்கலாம். நான் அடித்துக் கூறுகிறேன். அதிமுக வேட்பாளர் தேனி தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.