அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித் துறையை காக்க வேண்டும்: தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம்

புதுடெல்லி: அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித் துறையைப் பாதுகாக்க வேண்டும் என்று 600 மூத்த வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

இதுதொடர்பாக மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே, பிங்கிஆனந்த் உட்பட 600 வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடந்த 26-ம் தேதி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஒரு காலத்தில் நீதித் துறை சிறப்பாக செயல்பட்டது. அந்த காலம் நீதித் துறையின் பொற்காலம். இப்போதைய நீதிமன்றங்களின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது என்று ஒரு தரப்பினர் அவதூறு பரப்பி வருகின்றனர்.

ஊழல் வழக்குகளில் சிக்கிய அரசியல்வாதிகளுக்காக சில வழக்கறிஞர்கள் பகலில் நீதிமன்றங்களில் வாதாடுகின்றனர். அந்த வழக்கறிஞர்கள் இரவில் ஊடகங்கள் வாயிலாக நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி செய்கின்றனர். நீதிமன்றத்தின் குறிப்பிட்ட அமர்வுகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

சில நேரங்களில் நீதிபதிகள் குறித்து எதிர்மறையாக விமர்சிக்கின்றனர். சமூக வலைதளங்களில் திட்டமிட்டு பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். இத்தகைய செயல்கள் மூலம் நீதிமன்றங்கள், நீதிபதிகளின் மாண்பை சீர்குலைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது இதுபோன்ற சதிகள் நடைபெற்றன. தனிப்பட்ட மற்றும் அரசியல் ஆதாயங்களுக்காக தற்போதைய மக்களவைத் தேர்தல் நேரத்திலும் அதே அணுகுமுறையை சில சுயநல குழுக்கள் தீவிரமாக கடைப்பிடிக்கின்றன.

இதை அனுமதிக்கக்கூடாது. அரசியல் அழுத்தங்களில்இருந்து நீதித் துறையைப் பாதுகாக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அமைதியை கடைப்பிடித்தால் தவறிழைப்போருக்கு தைரியம் அதிகமாகிவிடும்.

இந்திய நீதித் துறையின் வலுவான தூண்களாக நீதிமன்றங்கள் உள்ளன. ஆனால் நீதிமன்றங்கள் குறித்து எதிர்மறையாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த பிரச்சினையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். தலைமை நீதிபதியும், இதர நீதிபதிகளும் இணைந்து நமது நீதிமன்றங்களை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு வழக்கறிஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காங்கிரஸ், ஆம் ஆத்மி மீது புகார்: பாஜக மூத்த தலைவர் கவுரவ் பாட்டியா கூறுகையில், “காங்கிரஸ், ஆம் ஆத்மியை சேர்ந்த வழக்கறிஞர்கள் நீதித் துறைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் செயல்படுகின்றனர். நீதிபதிகளின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் அவதூறாக விமர்சனம் செய்கின்றனர்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.