தீராத தொகுதிப் பங்கீடு பஞ்சாயத்து: அஜித் பவாரிடமிருந்து 3 தொகுதிகளை மறைமுகமாகப் பிடுங்கும் பாஜக!

மகாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ.க கூட்டணியில் சிவசேனா (ஷிண்டே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இக்கட்சிகளுக்கு இடையே மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. மூன்று கட்சி தலைவர்களும் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் மூன்று கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. அஜித் பவார் கட்சிக்கு வெறும் 6 தொகுதிகள் கொடுப்பதாக பா.ஜ.க சார்பில் தெரிவிக்கப்பட்டது. பாராமதி, ராய்கட், ஷிரூர், பர்பானி, சதாரா, ஒஸ்மனாபாத் போன்ற தொகுதிகளை கொடுப்பதாக பா.ஜ.க கூறி இருக்கிறது.

ஆனால் இதில் சதாரா மற்றும் ஓஸ்மனாபாத் தொகுதியில் வேட்பாளர்களை தங்களது சின்னத்தில் நிறுத்தவேண்டும் என்று பா.ஜ.க அஜித் பவாரிடம் நிபந்தனை விதித்துள்ளது. அதோடு பர்பானி தொகுதியை மற்றொரு கூட்டணி கட்சியான ராஷ்ட்ரீய சமாஜ் பக்‌ஷ கட்சிக்கு விட்டுக்கொடுக்கவேண்டும் என்றும் பா.ஜ.க தெரிவித்துள்ளது. 9 தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அஜித் பவாருக்கு 6 தொகுதியை கொடுத்துவிட்டு அதிலும் 3 தொகுதியை மறைமுகமாக பிடுங்கிக்கொள்ள முயற்சிக்கும் பா.ஜ.க-வின் திட்டத்திற்கு அஜித் பவார் சம்மதிக்கவில்லை. அதே போன்று ஷிண்டே எதிர்பார்க்கும் தொகுதிக்கு பா.ஜ.க வேட்பாளர்களை அறிவித்துக்கொண்டிருக்கிறது. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஷிண்டே தவித்துக்கொண்டிருக்கிறார்.

மேலும் மூன்று கட்சிகள் சார்பாக அதிருப்தி வேட்பாளர்களும் அதிக அளவில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். பாராமதியில் சிவசேனா தலைவர்களில் ஒருவரான முன்னாள் எம்.எல்.ஏ விஜய் சிவ்தாரே சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவரை மும்பைக்கு அழைத்து முதல்வர் ஷிண்டே, அஜித் பவார் மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வேட்பு மனுவை திரும்ப பெற விஜய் ஒப்புக்கொண்டார்.

இதே போன்று அமராவதி தொகுதியில் நவ்நீத் ராணாவிற்கு சுயேச்சை எம்.எல்.ஏ பச்சுகாடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராணாவிற்கு ஆதரவாக வேலை செய்யமாட்டேன் என்று பச்சுகாடு தெரிவித்துள்ளார். மேலும், முதல்வர் ஷிண்டேயின் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களும் ராணாவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்யமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.