அமெரிக்கா: டீன்ஏஜ் மகளை பல ஆண்டுகளாக மிதித்து, கொடுமை செய்த மேயர்

நியூயார்க்,

அமெரிக்காவின் அட்லாண்டிக் நகர மேயராக இருப்பவர் மார்ட்டி ஸ்மால். இவருடைய மனைவி லாகுவெட்டா ஸ்மால். அட்லாண்டிக் நகர பள்ளிகளின் சூப்பிரெண்டாக லாகுவெட்டா இருந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

2023-ம் ஆண்டு டிசம்பர் முதல் நடப்பு ஆண்டு ஜனவரி வரையிலான காலகட்டத்திற்கு இடையே இந்த தம்பதி தங்களுடைய மகளை, பல்வேறு முறை உடல் மற்றும் உணர்வுரீதியாக தாக்கி கொடுமைப்படுத்தி உள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் ஒரு முறை மகளை மேயர் மார்ட்டி, வீடு பெருக்க உதவும் துடைப்பம் கொண்டு பலமுறை தலையிலேயே தாக்கியதில், சுயநினைவு இழந்து அவர் சரிந்து விட்டார். மகளின் கால்களில் திரும்ப, திரும்ப குத்தியுள்ளார். இதில் மகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மாடிப்படியில் இருந்து தூக்கி வீசி விடுவேன் என்று மிரட்டியும் இருக்கிறார்.

இதேபோன்று, மார்ட்டியின் மனைவி லாகுவெட்டாவும் அவர்களுடைய டீன்ஏஜ் மகளை பல்வேறு சமயங்களில் கடுமையாக தாக்கியுள்ளார். நெஞ்சிலேயே குத்து விட்டும், மற்றொரு முறை வாக்குவாதம் முற்றியதில் வாயில் குத்தியும் இருக்கிறார். முடியை பிடித்து இழுத்து, பெல்ட் கொண்டு அடித்தும் இருக்கிறார். இதில், தோள் பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளது.

எனினும் இதுபற்றி நிருபர் கேட்டபோது, இது தனிப்பட்ட குடும்ப விவகாரம். தங்களுடைய டீன்ஏஜ் மகளை வளர்க்கும் நடைமுறையில் அந்த தம்பதி ஈடுபட்டு இருக்கிறது என்று அவர் சார்பாக வழக்கறிஞர் ஜேக்கப்ஸ் பதிலளித்து உள்ளார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும்படி தம்பதிக்கு எதிராக சம்மன்கள் அனுப்பப்பட்டு உள்ளன.

இதற்கு முன்பும் இதுபோன்று நடந்திருக்க கூடும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனினும், என்ன காரணத்திற்காக இந்த கொடுமைகள் நடந்துள்ளன என்ற விவரங்கள் தெரிய வரவில்லை. அரசு பொறுப்பில் உள்ள மேயர் மற்றும் அவருடைய மனைவி தங்களுடைய மகளை உடல் மற்றும் உணர்வுரீதியாக கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.