யாழ் புதிய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஒருங்கிணைந்த நேர அட்டவணையில், அரச, தனியார் பஸ்கள் பரீட்சார்த்த சேவையில் 

யாழ் நகரிலுள்ள புதிய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஒருங்கிணைந்த நேர அட்டவணையில் அரச மற்றும் தனியார் பஸ் சேவைகளை ஆரம்பிப்பதற்கான பரீட்சார்த்த நடவடிக்கையை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில், ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் (15/04/2024) நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. 

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் தரிப்பிடத்திலிருந்து அரச மற்றும் தனியார் நெடுந்தூர பஸ் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் நிலவிவரும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் பொருட்டு ஆளுநர் அவர்களால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, வட மாகாண பிரதம செயலாளர் திரு. இ. இளங்கோவன் அவர்களால் இதன்போது சமர்பிக்கப்பட்டது.

இந்நிலையில் புதிய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஒருங்கிணைந்த நேர அட்டவணையில் நெடுந்தூர பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான நேர அட்டவணையை தயாரிக்க கால அவகாசம் தேவை என பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

அதற்கமைய 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டதுடன்,  எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் ஒருங்கிணைந்த நேர அட்டவணையின்கீழ், நெடுந்தூர  சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பஸ்களின் போக்குவரத்து சேவைகளை முன்னெடுப்பதற்கான பரீட்சார்த்த நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.