“எந்த ஓர் அரசும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருக்கக் கூடாது” – ப.சிதம்பரம் கருத்து

சிவகங்கை: “நாடு தொடர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டுமென்றால், எந்த ஓர் அரசும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருக்கக் கூடாது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மத்தியில் 10 ஆண்டு காலம் ஆட்சி நடந்துள்ளது. 10 ஆண்டு காலம் என்பது குறுகிய காலமல்ல. 10 ஆண்டு காலம் என்பது ஒரு அரசை மதிப்பிட போதுமான காலம். இந்த அரசு என்ன விட்டுச் சென்றுள்ளது என்றால், பணவீக்கம் மற்றும் வேலையின்மை ஆகியவற்றைத்தான் நம்மிடம் விட்டுச்சென்றுள்ளது. இந்த இரண்டு காரணங்களுக்காக, இந்த அரசாங்கம் வெளியேற வேண்டும்.

எனது கருத்து என்னவென்றால், எந்த ஓர் அரசும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருக்கக் கூடாது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு மாற வேண்டும், சிந்தனை மாற வேண்டும், கொள்கைகள் மாற வேண்டும், ஆட்சியாளர்கள் மாற வேண்டும். ஒரு நாடு தொடர்ந்து முன்னேறிச் செல்ல இது மட்டுமே ஒரே வழி. எனவே, நாடு முன்னேற வேண்டுமானால் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். தற்போதைய ஆட்சி செல்ல வேண்டும். எனவே, மக்கள் மாற்றத்துக்கு வாக்களிக்க வேண்டும், இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

பாஜக 420 அல்லது 430 தொகுதிகளில்தான் போட்டியிடுகிறது. அப்படி இருக்கும்போது அக்கட்சி எப்படி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் சொல்ல முடியும். தமிழ்நாட்டில் பாஜக 25 தொகுதிகளில்தான் போட்டியிடுகிறது. அனைத்திலும் தோல்வி அடைந்துவிட்டால் எப்படி 400 தொகுதிகளில் வெற்றி பெற முடியும்?

இண்டியா கூட்டணி தமிழ்நாடு, கேரளா இரண்டிலும் முழுமையான வெற்றியைப் பெறும். கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் மிகப் பெரிய எண்ணிக்கையில் வெற்றி பெறுவோம். ராஜஸ்தான், ஹரியாணா, டெல்லி ஆகியவற்றில் கணிசமான இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம். அப்படி இருக்கும்போது பாஜக எப்படி 400 இடங்களில் வெற்றி பெற முடியும்?” என்று ப.சிதம்பரம் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.