`சூரிய ஒளி குழந்தைக்கு உணவளிக்கும்'…ஒரு மாத குழந்தைக்கு உணவு கொடுக்காமல் கொன்ற இன்ஃப்ளுயென்ஸர்!

ரஷ்யாவைச் சேர்ந்த வீகன் இன்ஃப்ளுயென்ஸர் மாக்சிம் லியுட்டி என்பவர் தன்னுடைய ஒரு மாதக் குழந்தைக்கு உணவு ஏதும் கொடுக்காமல் சூரிய ஒளியில் மட்டுமே வைத்திருக்கிறார்.

காஸ்மோஸ் என்ற தன் ஒரு மாத ஆண் குழந்தையைச் சூரிய ஒளியில் வைத்திருந்தால் `சூப்பர்ஹுயூமன் பவர்’ கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையில் குழந்தையை வெயிலில் வைத்திருக்கிறார். தாய்ப்பால் கொடுக்கக்கூடாது எனத் தன் மனைவி ஒக்ஸானா மிரோனோவாவைத் தடுத்திருக்கிறார். சூரிய ஒளி குழந்தைக்கு உணவளிக்கும் என்று சொல்லி இருக்கிறார். 

இவர் குழந்தையை வைத்துச் சோதனையை மேற்கொண்டுள்ளார். குருக்களும், ரிஷிகளும் பழங்காலத்தில் உணவு ஏதும் எடுத்துக் கொள்ளாமல் தவமிருந்து வெறும் பிராண (prana) சக்தியின் மூலம் மட்டுமே வாழ்ந்தனர் எனக் கூறப்படுகிறது. இதனைத் தன் குழந்தைக்கு முயற்சி செய்திருக்கிறார். 

newborn baby

குழந்தைக்கு விதிமுறைகளோடு வீகன் பிராணா டயட்டை (vegan prana diet) வழங்கி இருக்கிறார். உடலின் ஆன்மிக ஆற்றலை மேம்படுத்துவதாக நம்பப்படும் பெர்ரி போன்ற உணவுகளை மட்டும் அந்த பிஞ்சுக் குழந்தைக்கு கொடுத்திருக்கிறார். அதோடு குழந்தையைப் பலப்படுத்தும் என குளிர்ந்த நீரில் குளிக்க வைத்திருக்கிறார். 

இந்நிலையில் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து குழந்தையை சோச்சியிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் நிமோனியாவால் குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

குழந்தைக்கு வேண்டுமென்றே தீவிரமான உடல் தீங்கு விளைவித்த குற்றத்திற்காக இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த வாரம் தண்டனைக்கு முன்னதாக அவர் இறுதி நீதிமன்ற விசாரணையில் ஆஜராகியபோது, தன் மகனைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார். வழக்கறிஞர்கள் அவருக்கு எட்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 900 பவுண்டுகள் அபராதமும் விதிக்கக் கோரினர். 

இது குறித்து மிரோனோவாவின் உறவினர் ஒலேஸ்யா நிகோலயேவா கூறுகையில், “குழந்தைக்கு உணவளிக்கக் கூடாது என்று அவர் கட்டாயப்படுத்தினார். சூரியன் குழந்தைக்கு உணவளிப்பதாக அவர் நம்பினார். ஒக்ஸானா ரகசியமாகக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முயன்றாள்; ஆனால், அவள் அவருக்கு மிகவும் பயந்தாள். சூரிய ஒளி குழந்தைக்கு உணவளிப்பது எப்படி சாத்தியம்?… ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் தேவை’’ என்று கூறியுள்ளார்.

மிரனோவாவின் தாயார் கலினா, “என் மகள் இப்படி இருப்பதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். நான் எல்லாவற்றையும் உணர்ந்தேன், அவன் பைத்தியம் என்று அவளிடம் சொன்னேன்; ஆனால், அவள் என் பேச்சைக் கேட்கவில்லை. 

சிறைச்சாலை

அவள் அங்கு ஒரு பன்றியைப் போல வாழ்ந்தாள். அவள் அவனுடைய அடிமை. அவள் பல முறை அவனை விட்டு வெளியேற விரும்பினாள், ஆனால், அவன் அவளைத் தடுத்து நிறுத்தினான். அவன் தன் மகனை சூரியனை மட்டுமே உண்ணும் மனிதனாக வளர்க்க விரும்பினான். 

அவன் ஆண் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்ட நேரத்தில், மிகவும் தாமதமாகிவிட்டது.

ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி மருத்துவமனை செல்வதற்கு முன்பே குழந்தை இறந்துவிட்டது. 3.5 பவுண்டுகள் எடையுள்ள குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். லியுட்டி மற்றும் மிரோனோவா இருவரும் கைது செய்யப்பட்டனர்’’ என்று வருந்தியுள்ளார். 

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், சிறைவாசத்தின் போது, லியுட்டி தன் முந்தைய மூடநம்பிக்கைகளை முற்றிலும் கைவிட்டுவிட்டாராம். இறைச்சியைக் கூட உட்கொள்கிறார் எனக் கூறப்படுகிறது.    

`இவர் குழந்தையின் மீது பரிசோதனை செய்து, சூரிய ஒளி மூலம் உணவளிக்க விரும்பியுள்ளார், பின்னர் நீங்கள் இப்படிச் சாப்பிடலாம் என்று மற்றவர்களுக்கு விளம்பரம் செய்ய வேண்டும் என்று அவர் யோசித்திருக்கிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விளம்பரம் செய்வதற்கும், சோதனை செய்வதற்கும் குழந்தை ஒரு விளையாட்டு பொம்மையல்ல! 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.