பார்முக்கு வந்த பட்லர், கடைசி ஓவரில் கூடிய பரபரப்பு… திரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்

கொல்கத்தா 33 ரன்கள்

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி அபாரமாக விளையாடிய 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி அதிரடியாக ஆடி 223 ரன்கள் குவித்தது. கேகேஆர் அணியில் அதிரடியாக விளையாடிய சுனில் நரைன் 49 பந்துகளில் தன்னுடைய முதல் 20 ஓவர் சதத்தை பதிவு செய்தார். சுனில் நரைன் 56 பந்துகளில் 109 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, ராஜஸ்தான் அணியில் அஸ்வின், சாஹல் மட்டும் 8 ஓவர்ளில் 103 ரன்களை அள்ளிக் கொடுத்தனர்.

ராஜஸ்தான் அணி சேஸிங்

கேகேஆர் அணி 224 என்ற மிகப்பெரிய வெற்றி இலக்கை நிர்ணயித்த நிலையில், அதனை நோக்கி விளையாட தொடங்கியது ராஜஸ்தான் அணி. அந்த அணியின் ஜெய்ஷ்வால் அதிரடியாக ஆட முயற்சித்து விக்கெட்டை பறி கொடுத்த நிலையில் அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சனும் அவுட்டாக ராஜஸ்தான் அணி சிக்கலுக்குள்ளானது. இருப்பினும் ஆர்ஆர் அதிரடியை விடவில்லை. சூப்பர் பார்மில் இருக்கும் ரியான் பராக் 34 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். ஹர்சித் ராணா வீசிய 8வது ஓவரின் 5வது பந்தினை ரியான் பராக் வேகமாக தூக்கி அடிக்க, பந்து ஆகாயத்தை நோக்கி ஜெட் வேகத்தில் பறந்தது. ஆனால் அந்த பந்து ஆடுகளத்தை விட்டு வெளியே போகாமல், ரஸலிடம் கேட்சாக தஞ்சம் அடைந்தது. இதனால், ப்ராக் தனது விக்கெட்டினை இழந்து பெவிலியன் திரும்பினார்.

தடுமாறிய ராஜஸ்தான் அணி

ஒரு பக்கம் பட்லர் மட்டும் நங்கூரம் போல் நிலைத்து நின்று விளையாடிக் கொண்டிருக்கும்போது மறுமுனையில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக்கொண்டு இருந்தது ராஜஸ்தான் அணி. அப்போது தனது 4வது விக்கெட்டாக துருவ் ஜுரேலையும் இழந்தது. அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட துருவ் ஜுரேல் சுனில் நரைன் பந்தில் வெளியேறினார். அதன் பின்னர் வந்த அஸ்வின் பட்லருக்கு துணையாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் கவனமாக விளையாடினார். ஆனால் இவர்கள் கூட்டணி 21 பந்தில் 21 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வின் தனது விக்கெட்டினை வருண் சக்ரவர்த்தி பந்தில் இழந்து வெளியேறினார். அடுத்து வந்த ஹெட்மயர் வந்த வேகத்தில் சந்தித்த முதல் பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

பட்லர் சதம்

ஆனால் அடுத்து வந்த ரோமன் பவல், பட்லருடன் இணைந்து அதிரடியாக விளையாடினார். 15வது ஓவருக்குப் பின்னர் இருவரும் கியரை அதிரடிக்கு மாற்றினர். இதனால் பவுண்டரி சிக்ஸர் வந்தவண்ணம் இருந்தது. இவர்கள் கூட்டணி 27 பந்தில் 57 ரன்கள் சேர்த்த நிலையில் பவல் தனது விக்கெட்டினை இழந்தார்.
இறுதியில் கடைசி இரண்டு ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் ராஜஸ்தான் அணிக்கு நம்பிக்கை அளிப்பவராக பட்லர் மட்டுமே இருந்தார். 19வது ஓவரின் முதல் நான்கு பந்துகளில் 16 ரன்கள் விளாசினார் பட்லர். 19வது ஓவரில் பட்லர் தனது அதிரடி ஆட்டத்தினால், 17 ரன்கள் சேர்த்தார். இந்த 17 ரன்கள் மூலம் தனது சதத்தினையும் எட்டினார் பட்லர். 

ராஜஸ்தான் அணி வெற்றி

கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசிய பட்லர், அடுத்த மூன்று பந்துகளில் ரன் எதுவும் எடுக்கததால் ஆட்டத்தில் பரபரப்பு கூடியது. இருப்பினும் 5வது பந்தில் இரண்டு ரன்களும் கடைசி பந்தில் ஒரு ரன்னும் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். இந்த வெற்றியின் மூலம் 7 போட்டிகளில் ஆறு போட்டிகளில் வென்று முதல் இடத்தில் இருக்கிறது ராஜஸ்தான் அணி. ஆறு போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது கொல்த்தா அணி. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.