Sexual Health: ஆண்மை என்றால் என்ன? – பாலியல் மருத்துவர் நாராயணரெட்டி! | காமத்துக்கு மரியாதை – 160

‘ஆம்பளையா நீ’ ; `ஆண்மையில்லாதவன்’ – ஆண்மைக்குறைவு என்ற அர்த்தம் தொனிக்கிற வார்த்தைகளை பெரும்பாலானோர் வாழ்க்கையில் ஒருமுறையாவது உச்சரித்து இருப்பார்கள். உண்மையில் ஆண்மை என்றால் என்ன… மூத்த பாலியல் மருத்துவர் நாராயணரெட்டி இங்கே விளக்குகிறார். “போலி மருத்துவர்கள் `ஆண்மைக்குறைவு’ என்ற வார்த்தையை தங்கள் வியாபாரத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நாமோ, சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமலே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். என்னிடம் ஆலோசனைக்காக வருகிற சிலர்கூட, `என் மாப்பிள்ளைக்கு ஆண்மை இல்லைங்க’ ; `அவருக்கு ஆண்மை இருக்கா, இல்லையான்னு பரிசோதிச்சுப் பார்த்து சொல்லுங்க’ என்கிறார்கள்.

என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன். சில ஆண்களுக்கு விறைப்புத்தன்மையில் கோளாறு இருக்கும், தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாமல் இருக்கும். ஆனால், அவர்களுடைய விந்தணுக்களைப் பரிசோதித்துப் பார்த்தால் மிகத் தரமானவையாக இருக்கும். அந்த ஆண் உறவில் ஈடுபட்டால் நிச்சயம் குழந்தை பிறக்கும். இப்படிப்பட்ட ஆண்களை சுய இன்பம் செய்ய வைத்து விந்தணுக்களைச் சேகரித்து, மனைவியின் கர்ப்பப்பையில் கருமுட்டை வெளிப்படும் நேரத்தில் உள்ளே செலுத்தினால், அந்த மனைவி கருத்தரிக்க வாய்ப்பு இருக்கிறது.

Sexual health

சில ஆண்களுக்கு விந்தணுக்கள் சீக்கிரம் வெளியேறுகிற பிரச்னை இருக்கும். பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை செலுத்துவதற்கு முன்னரே விந்தணுக்கள் வெளியேறி விடும். இப்படிப்பட்டவர்களின் மனைவியால் கருத்தரிக்க முடியாமல் போகும். இந்த ஆண்களின் விந்தணுக்களை எடுத்து மனைவியின் கர்ப்பப்பையில் செலுத்தி கருத்தரிக்க வைக்க முடியும். மேலே சொன்ன இந்த இரண்டு வகை ஆண்களாலும் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாது. என்றாலும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். அப்படியென்றால் எதை வைத்து ஓர் ஆணுக்கு ஆண்மை இருக்கிறது அல்லது இல்லை என்பதைச் சொல்ல முடியும்?

சில ஆண்கள் தாம்பத்திய உறவில் நன்றாகவே ஈடுபடுவார்கள். ஆனால், அவர்களுடைய விந்தணுக்கள் போதுமான எண்ணிக்கையில் இருக்காது அல்லது தரமாக இருக்காது. இப்படிப்பட்டவர்களின் மனைவிகளால் கருத்தரிக்க இயலாது. இந்த வகை ஆண்களை எப்படி ஆண்மையற்றவர்கள் என்று சொல்ல முடியும்? இன்னோர் உதாரணமும் சொல்கிறேன். ஓரினச் சேர்க்கையில் விருப்பம் கொண்ட ஆண்களுக்கு, பெண்கள் மீது எந்த ஈடுபாடும் இருக்காது. ஆண்கள் மீது மட்டுமே அவருக்கு ஈர்ப்பு ஏற்படும். அதற்காக அவர்களை ஆண்மையற்றவர்கள் என்று சொல்லிவிட முடியுமா?

ஆன்மிகத்தில் பெரும் ஈடுபாடு கொண்ட சிலர் தாம்பத்திய உறவின் மீது ஈடுபாடில்லாமல் இருக்கலாம். அந்த ஆண்களைப் பரிசோதித்தால் குழந்தை பெறுவதற்கான தகுதியுடன் இருப்பார்கள்.

செக்ஸில் விருப்பமில்லை என்ற ஒரே காரணத்துக்காக அவர்களை ஆண்மையற்றவர்கள் என்று சொல்ல முடியாதல்லவா? அதனால், எந்தவோர் ஆணையும் ஆண்மையற்றவர் என்ற வார்த்தையால் குறிப்பிடாதீர்கள்” என்றவர் தொடர்ந்தார்.

sexual health

“இப்போது மருத்துவரீதியாக ஆண் என்பதற்கான ஏழு அறிகுறிகளை உங்களுக்குச் சொல்கிறேன். ஓர் ஆணுடைய செல்லை பரிசோதித்தால் , குரோமோசோம்களில் 23-வது ஜோடியில் ஒரு X, ஒரு Y இருக்கும். இதை வைத்து அவர் ஆண் என்பதை உறுதி செய்யலாம். இதுதான் முதல் அறிகுறி.

முகத்தில் மீசை, தாடி, உடலில் மார்பு, அடிவயிறு ஆகிய பகுதிகளில் ரோம வளர்ச்சி இருக்கும். இது இரண்டாவது அறிகுறி.

கண்ணுக்குத் தெரிந்த ஆணுறுப்பும் விதைப்பைகளும் இருப்பது மூன்றாவது அறிகுறி.

கண்ணுக்குத் தெரியாமல் உடலுக்குள் இருக்கிற புராஸ்ட்டேட் சுரப்பி, செமினல் வெசிகல் சுரப்பி நான்காவது அறிகுறி.

டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் ஆண் உடம்பிலும் இருக்கும்; பெண் உடம்பிலும் இருக்கும். ஆனால், இது ஆண்களுடைய உடம்பில் அதிகமாக இருக்கும். இதை வைத்தும் சம்பந்தப்பட்டவர் ஆண் என்பதை உறுதி செய்யலாம். இது ஐந்தாவது அறிகுறி.

பார்க்கும்போதே ஆணுக்குரிய உடல் வடிவம் தெரிவது ஆறாவது அறிகுறி.

ஆண் ஹார்மோன் காரணமாக, ஓர் ஆணின் சிந்தனைகள், வேலை செய்யும் விதம் எல்லாமே ‘male brain pattern’-ல் இருக்கும். பெண்ணுக்கு இது வேறு மாதிரி இருக்கும். இது ஏழாவது அறிகுறி. இந்த ஏழும் சேர்ந்தால்தான் மருத்துவரீதியாக ஒருவரை ஆண் என்று சொல்ல முடியும். இதை விடுத்து விறைப்புத்தன்மை இருக்கிறதா; தாம்பத்திய உறவில் ஈடுபட முடிகிறதா; மனைவியை தாயாக்க முடிகிறதா என்று பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

Dr. Narayana Reddy

ஆண் தன் மீது நம்பிக்கைக் கொண்டவனாக இருக்க வேண்டும். குடும்பத்தைக் காப்பவன், மனைவிக்கு சம மரியாதை தருபவனாக இருக்க வேண்டும். மீசையை முறுக்குவதெல்லாம் ஆண்மைக்கான அடையாளம் அல்ல. இனிமேல், எந்தவோர் ஆணையும் ஆண்மையற்றவர் என்று குறிப்பிடாதீர்கள்” என்று முடித்தார் டாக்டர் நாராயண ரெட்டி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.