மும்பை இந்தியன்ஸில் வரப்போகும் 'இந்த' மாற்றம் – வெற்றி உறுதி… பதற்றத்தில் பஞ்சாப்

PBKS vs MI Match Review In Tamil: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 33வது லீக் தொடர் இன்று நடைபெறுகிறது. சண்டிகரில் உள்ள முல்லான்பூர் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் இவ்விரு அணிகளும் பலமாக காணப்பட்டாலும் இன்னும் முழுமையான வெற்றிப்பாதைக்கு இரு அணிகளும் செல்லவில்லை எனலாம்.

இரு அணிகளும் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ளன, நான்கில் தோல்வி இரண்டில் வெற்றியாகும். மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 2 போட்டிகளையும் சொந்த மண்ணில்தான் வென்றுள்ளது. மேலும் சொந்த மண்ணிலும், அவே மைதானத்திலும் தலா 2 தோல்விகளாகும். ஆனால் ஹைதராபாத் அணியோ சௌந்த மண்ணில் தொடர்ந்து திணறிவருகிறது. முதல் போட்டியில் மட்டுமே அங்கு வெற்றி பெற்றது, அதன் பின் சண்டிகரில் நடந்த 2 போட்டிகளிலும் அந்த அணி தோல்வியே தழுவியது. 

இப்படி இரு அணிகளுக்கும் ஹோம் மற்றும் அவே சூழலில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதால் இன்று எந்த அணிக்கு வெற்றி என்பதை அறுதியிட்டு கூற இயலாது. குறிப்பாக, டி20 போட்டி என்றாலே அன்றைய தினத்தில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களுக்குதான் வெற்றி என்பது எழுதப்படாத விதியாகும். அந்த வகையில் இன்றைய போட்டி நடைபெறும் முல்லான்பூர் மைதானம் யாருக்கு அதிக சாதகமாக இருக்கும், இரு அணிகளின் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்குமா, எந்தெந்த வீரர்களுக்கு களத்தில் போட்டி என பஞ்சாப் – மும்பை போட்டியின் முழு விவரத்தையும் இங்கு காணலாம்.

பஞ்சாப் அணியின் துரதிருஷ்டம்

பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவாண் காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடவில்லை. மேலும், இன்றைய போட்டியிலும் அவர் விளையாடும் வாய்ப்பு குறைவு எனவும் தெரிகிறது. எனவே சாம் கரன் கேப்டனாக செயல்படுவார். அந்த அணியின் பேட்டிங் வரிசையில் அதர்வா டைடே கடந்த போட்டியில் சற்று அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார். 

ஆனால் மறுமுனையில் பேர்ஸ்டோவ் திணறி வந்தார். இன்றைய ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் விளையாடவில்லை. எனவே, இன்று அவருக்கு பதில் தென்னாப்பிரிக்க வீரர் ரைலே ரூசோவுக்கு வாய்ப்பளிக்கப்படலாம். மற்றபடி, ஷஷாங்க் சிங், அஷுடோஷ் ஷர்மா முரட்டு பார்மில் இருப்பதால் மும்பையின் பலவீனமான பந்துவீச்சு அவர்களுக்கு பெரிய வாய்ப்பை வழங்கலாம். லிவிங்ஸ்டன், சாம் கரன், பிரப்சிம்ரன் சிங், ஜித்தேஷ் சர்மா என ஒரு நீண்ட பேட்டிங்கே உள்ளது. 

அதே போல், சாம் கரன், லிவிங்ஸ்டன், ராகுல் சஹார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்பிரித் பரர் என பெரிய பௌலிங் அட்டாக் வீரர்களும் உள்ளனர். இருப்பினும் இவர்கள் இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாண்டாக வேண்டும்.

மும்பை இந்தியன்ஸில் மாற்றம்

மும்பை அணி முதலில் 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து, அடுத்த 2 போட்டிகளை மாஸாக வென்று கம்-பேக் கொடுத்த நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் மீண்டும் படுதோல்வி அடைந்தது தற்போது அவர்களுக்கு மீண்டும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் ஹர்திக் பாண்டியா உச்சக்கட்ட அழுத்தத்தில் இருக்கிறார். கேப்டன் பொறுப்பு ஒருபுறம் பேட்டிங்கில் ஜொலிக்க வேண்டியது ஒருபுறம், டி20 உலகக் கோப்பையில் இடம்பெற 4 ஓவர்களை ஒரு போட்டியில் வீசியாக வேண்டும் என்ற கட்டாயமும் அவரிடம் உள்ளது. 

மும்பை அணிக்கு கடந்த நான்கு போட்டிகளில் முதுகெலும்பாக இருந்தது, ரோஹித் சர்மா – இஷான் கிஷன் ஜோடிதான். ஓப்பனிங்கில் அதகளப்படுத்தும் இந்த ஜோடி இன்றைய போட்டியில் ஜொலிக்குமா என்பது கேள்வியாக உள்ளது. முல்லான்பூரில் பவர்பிளே ஓவர்களில் ரன் அடிப்பது சற்று கடினம் என்பதால் ரோஹித் – இஷான் ஜோடி இங்கு சமாளிக்கும் என்பதை பார்க்க வேண்டும். சூர்யகுமார், திலக், ஹர்திக், டிம் டேவிட், ஷெப்பேர்ட் ஆகியோர் உள்ளதால் நபிக்கு பதில் நுவான் துஷாராவை மும்பை இன்று சோதித்து பார்க்கும் என தெரிகிறது. 

பும்ரா மட்டுமே நன்றாக பந்துவீசி வருகிறார். கோட்ஸி சுமாராக வீசும் நிலையில் மும்பை ஒரு மாற்றத்திற்காக துஷாராவை களமிறக்கலாம். ஆடுகளம் பேட்டிங்கிற்கே சாதகமாக இருக்கும் என்பதால் மலிங்கா போல் பந்துவீச்சு முறையை கொண்டிருக்கும் துஷாரா X Factor ஆக மாறுவார். இது மும்பைக்கு பலத்தை சேர்க்கும். இவை அனைத்தையும் பார்க்கும்போது, மும்பை அணிக்கே அதிக வெற்றி வாய்ப்புள்ளது. இப்போது மும்பை அணி 9வது இடத்திலும், பஞ்சாப் 8வது இடத்திலும் உள்ளன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.