மேற்குவங்காளத்தில் ராம நவமி ஊர்வலத்தில் கற்கள் வீசி தாக்குதல்: 20 பேர் படுகாயம்

கொல்கத்தா,

ராம பிரான் அவதரித்த ராம நவமி விழா நாடுமுழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இந்த நிலையில், மேற்குவங்காளம் மாநிலம் முர்ஷிதாபாத்தின் சக்திபூர் பகுதியில் ராம் நவமி உத்சவ் உஜ்ஜபன் கமிட்டி நடத்திய ஊர்வலத்தின் மீது சிலர் வீட்டின் மாடிகளில் இருந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கல்வீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து அங்கிருந்த கும்பலைக் கலைக்க போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் கலவரம் நடந்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பாக மேற்கு வங்காள போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதற்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜியே காரணம் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.