Prashanth: டாக்டர் கனவு; முதல் படமே மெகா ஹிட்; டாப் ஸ்டார் பிரசாந்த்தின் திரைப்பயணம் ஒரு ரீவைண்ட்

நடிகர் விஜய் நடித்து வெங்கட் பிரபு இயக்கும் The GOAT படத்தின் முதல் பாடல் `விசில் போடு’ பாடல் வெளியாகியிருக்கிறது. விஜய், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் என நடிகர் பட்டாளம் அந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

பல வருடங்களுக்குப் பிறகு நடிகர் பிரசாந்த் தமிழ் படம் ஒன்றின் மூலம் திரையில் தோன்றியிருக்கிறார். சமூக வலைதளங்களில் பலரும் பிரசாந்த்தின் இந்த வருகை குறித்து வாழ்த்திப் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரசாந்த்தின் சினிமா என்ட்ரி, மணிரத்னம், ஷங்கர், பாலுமகேந்திரா என முன்னணி இயக்குநர்கள் பலரின் படங்களில் பணியாற்றியது உள்ளிட்ட பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. அதைப் பற்றிய ஒரு ரீவைண்டு இதோ…

தியாகராஜன், பிரசாந்த்

வேடிக்கையாக நிகழ்ந்தது சினிமாவில் பிரசாந்த்தின் நுழைவு. 17 வயது முடிந்து கல்லூரிக்குப் போக தயாராக இருந்த போது இயக்குநர் ராதா பாரதி தன் முதல் படைப்பான `வைகாசி பொறந்தாச்சு’ படத்திற்கு பிரசாந்தைக் கேட்டு அப்பா தியாகராஜனை அணுகினார். ஏற்கெனவே நடிகராக அறியப்பட்டவர் தன் மகனையும் திரையுலகிற்குள் அனுப்ப விரும்பவில்லை. தியாகராஜனின் விருப்பம் பிரசாந்த்தை டாக்டருக்குப் படிக்க வைக்க வேண்டும் என்பதாய் இருந்தது. அதக்கேற்ற மாதிரிதான் பிரசாந்த் வளர்க்கப்பட்டிருந்தார். அவர் மருத்துவப் படிப்பிற்கான நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்றிருந்தார். அந்த சமயம் பார்த்து ராதாபாரதி தன் படத்திற்கான ஹீரோவாக ஒரே ஒரு படமாவது அவரை நடிக்க அனுமதிக்கும்படி கேட்டிருக்கிறார். இதனால் எனது முதல் பட கனவு நிறைவேறும் என மன்றாடினார். பிறகுதான் பிரசாந்த்தை ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தில் நடிக்க அனுமதித்தார் தியாகராஜன்.

‘வைகாசி பொறந்தாச்சு’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. பட்டி தொட்டி எங்கும் படத்தின் பாடல்கள் ஒலித்தன. `யாருப்பா இந்த பையன்?’ என மக்கள் மத்தியில் பிரசாந்த் பேசப்பட்டார். அவரது சாக்லேட் பாய் இமேஜ் அதற்கு உதவியாக இருந்தது. அவரது நடனம் இளைஞர் பட்டாளத்தை இழுத்துப்போட்டது. அப்படியும் தியாகராஜன் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. மருத்துவப் படிப்பைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன. அப்போதுதான் மலையாளத்தின் முக்கிய எழுத்தாளர் எம்டி வாசுதேவன் நாயரின் ‘பெருந்தச்சன்’ படத்தில் நடிக்க பிரசாந்த்தை அணுகினார்கள். எம்டி வாசுதேவன் நாயரின் வேண்டுகோளைத் தட்ட முடியாமல் அந்தப் படத்தில் மட்டும் பிரசாந்த்தை நடிக்க அனுமதித்தார் தியாகராஜன். அந்தப் படமும் பெரும் வெற்றியடைய, அதற்கு மேலும் பிரசாந்த்தை நடிக்க வைக்க நோ சொல்ல முடியவில்லை. அதற்குப் பிறகு உற்சாகமாக வலம் வந்தார் பிரசாந்த்.

வண்ண வண்ண பூக்கள் படத்தில்…

தியாகராஜன் தன் மகனை மருத்துவர் ஆக்க நினைத்தக் கனவு முடித்து வைக்கப்பட்டு முற்றிலும் எதிர்பாராமல் ஹீரோவானார் பிரசாந்த். பாலு மகேந்திராவும் தன் கேமரா கண்களுக்குள் பிரசாந்தை கொண்டு வந்தார். தனது தேசிய விருதுப் படமான `வண்ண வண்ண பூக்கள்’ படத்தில் பிரசாந்த்தை நடிக்க வைத்தார். பாலு மகேந்திராவன் கவித்துவமும், இளமை துடிப்பான இயக்கமும் பிரசாந்த்தின் சாக்லேட் பாய் பிம்பத்துக்கு வலு சேர்த்தது. அடுத்தது அப்போது பிரபலமாக இருந்த அதன் பிறகு ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் ரோஜா நடிகையாக அறிமுகமான `செம்பருத்தி’ படம் மற்றொரு மெகா ஹிட். பல ஜாம்பவான் நடிகர்கள் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த போது இளம் நடிகராகக் களமிறங்கி அத்தனை பேரின் கவனத்தையும் தன் பக்கமாகத் திருப்பினார்.

அடுத்தடுத்து பிரசாந்த்திற்கு படங்கள் குவிந்தன. பெண் ரசிகைகள் அதிகமாகினர். இப்போதும் வெற்றிவாக சூடி இருக்கிற ஷங்கர் வரைக்கும் அவரைத் தேடினார்கள். மணிரத்னமும் அவரது பங்கிற்கு நடிக்க வைத்தார். பிரசாந்த்தை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்து ஷங்கர் இயக்கிய `ஜீன்ஸ்’ படம் இன்று வரையிலும் பலரது பேவரைட். `ஜோடி’, `குட்லக்’, `பார்த்தேன் ரசித்தேன்’, `மஜ்னு’ என அடுத்தடுத்து அவர் நடித்த பல படங்கள் ஹிட்டடித்தன. படத்தின் பாடல்களும் இன்று வரையிலும் டிரெண்ட்டில் இருக்கின்றன.

எல்லா இயக்குநர்களுக்கும் பிடித்தமானவராக மாறினார் பிரசாந்த். சிறு சறுக்கல்கள் இருந்தாலும் அவரது பயணம் தொடர்ந்தது. சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ‘வின்னர்’ படத்தில் வடிவேலுடன் இணைந்தது அவருக்குப் பெரும் புகழைக் கொண்டு வந்து சேர்த்தது. வின்னருக்குப் பிறகு அவரின் வெற்றிக்கானப் படங்களாகச் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் அமையவில்லை. இடையில் அப்பாவின் `மம்பட்டியான்’ ரீ மேக், கலைஞரின் `பொன்னர் சங்கர்’ படத்தில் நடித்து லைம் லைட்டில் இருந்தார்.

விஜய், தியாகராஜன், பிரசாந்த்

2018க்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்துதான் ‘அந்தகன்’ தொடங்கப்பட்டது. பெரும் வெற்றி பெற்ற இந்தி படமான ‘அந்தா தூனை’ வாங்கி தியாகராஜனே மகனுக்காகத் தயாரித்து, டைரக்ட்டும் செய்தார். படம் ரெடியாகியும் ஏனோ வெளியிடப்படாமல் தன் வசமே வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் இடைவெளிக்குப் பிறகு நடிகர் விஜய்யோடு `தி கோட்’ படத்தில் இணைந்திருக்கிறார். பிரசாந்த் விஜய்யோடு சேர்ந்து நடித்து வெளியாகியிருக்கும் ‘விசில் போடு பாடல்’ இணையத்தில் சக்கை போடு போடுகிறது. விஜய்க்கு இணையாக சேர்ந்து ஆட்டம் போடும் பிரசாந்த்தின் துள்ளல் வெகுவாக ரசிக்கப்பட்டிருக்கிறது. எல்லோரும் பிரசாந்த்தைப் பற்றிப் பேச துவங்கும் காலம் திரும்பியிருக்கிறது. மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார் பிரசாந்த். ‘விசில் போடு’ பாட்டு பிரசாந்த்தின் ஞாபகத்தை திருப்பிப் போட்டு இருக்கிறது. மறுபடியும் பிரசாந்த்தின் கம்பேக் நடக்கிறது என்றே தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் டாக்.

பிரசாந்த் நடிப்பில் உங்களுக்குப் பிடித்த படத்தைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.