"போதும் நிறுத்திக்குவோம்".. பி.கே.வுக்கு குட்பை சொல்லத் தயாராகும் திரினமூல்!

பிரஷாந்த் கிஷோருக்கு ஏற்கனவே
திமுக
டாட்டா காட்டி விட்ட நிலையில் அடுத்து
திரினமூல் காங்கிரஸ்
கட்சியும் பி.கே.வுடனான தொடர்புகளை முடித்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாம்.

தேசிய அளவில் குறுகிய காலத்தில் விஸ்வரூபம் எடுத்த தேர்தல் உத்தி வகுப்பாளர் என்றால் அது பிரஷாந்த் கிஷோராகத்தான் இருக்க முடியும். முதலில் நரேந்திர மோடி, பிரதமராக வருவதற்கான உத்திகளை வகுத்துக் கொடுத்தார். அதுதான் அவருக்கான விசிட்டிங் கார்டாக அமைந்தது. அதைத் தொடர்ந்து தேசிய அளவில் பல்வேறு கட்சிகளுக்கும் உத்திகளை வகுத்துக் கொடுத்துள்ளார்.

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, தமிழகத்தில் திமுக, மேற்கு வங்காளத்தில் திரினமூல் காங்கிரஸ் என்று அவர் எடுத்துக் கொண்ட பிராஜக்ட்கள் எல்லாமே வெற்றியில்தான் முடிந்தன. அதுவும் கடந்த சட்டசபைத் தேர்தலில் ஒரே நேரத்தில் தமிழகத்திலும், மேற்கு வங்காளத்திலும் அவர் வகுத்த உத்திகளை சமாளிக்க முடியாமல் பாஜக கடுமையாக திணறிப் போனதையும் நாடு பார்த்தது.

ஆனால் சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் பி.கே.வுடனான தொடர்புகளை திமுக முடித்துக் கொண்டு விட்டது. தற்போது திமுகவே தனது உத்திகளை சுயமாக வகுக்க ஆரம்பித்துள்ளது. இதே பாணியில் திரினமூல் காங்கிரஸும் பிரஷாந்த் கிஷோருடன் தொடர்புகளை நிறுத்த தீர்மானித்துள்ளதாம். இதுகுறித்து மூத்த திரினமூல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், ஐபேக் நிறுவனத்துடன் மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வது குறித்த நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகள் கட்சி தலைமையில் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

பி.கே கணக்கை முடிக்க திரினமூல் காங்கிரஸ் விரும்ப முக்கியக் காரணம், விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் பல மூத்த உள்ளூர் தலைவர்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் போக பி.கே. தான் காரணம் என்ற அதிருப்திதானாம். சீட் கிடைக்காத பல உள்ளூர் தலைவர்களும் பி.கே.வுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனராம்.

கடந்த லோக்சபா தேர்தலின்போது திரினமூல் காங்கிரஸுக்குப் பெருத்த பின்னடைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு பி.கே.வின் உதவியை நாடி அவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டது திரினமூல் காங்கிரஸ். ஆனால் தற்போது பி.கே.வின் செயல்பாடுகளால் கட்சியின் பல்வேறு மட்டத் தலைவர்களும் அதிருப்தி அடைந்துள்ளனராம்.

இதையடுத்து ஐபேக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வது குறித்து கட்சித் தலைமை ஆலோசித்து வருகிறதாம். விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.