எச்ஐவி பாதிப்பிலிருந்து குணமடைந்த முதல் பெண்!

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவது போல், சில ஆண்டுகளுக்கு முன்னர்
எச்ஐவி வைரஸ்
தொற்று பெரும் ஆபத்து மிக்கதாக பார்க்கப்பட்டது. எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து முழுவதும் மீண்டு வருவது கடினம் எனவும், மருந்துகள் மூலம் வாழ்நாளை அதிகரித்துக் கொள்ள மட்டுமே முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், மருத்துவ வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்களின் தொடர் முயற்சியால் எச்ஐவி தொற்றில் இருந்து நிரந்தர குணமாக முடியும் என்ற மருத்துவ உலகின் புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் முழுமையாக குணமடைந்துள்ளார். உலகிலேயே எச்ஐவி பாதிப்பிலிருந்து குணமடைந்த முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். இந்தப் பெண்ணுக்கு தொப்புள் கொடி ரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2013ஆம் ஆண்டில் இந்த பெண்ணுக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவருடைய நெருங்கிய உறவினர் ஒருவர் அப்பெண்ணுக்கு தொப்புள் கொடி ரத்தம் தானம் செய்தார். பின்னர் அந்த பெண்ணுக்கு, அடல்ட் ஸ்டெம் செல்கள் செலுத்தப்பட்டன. இதன் மூலம் அப்பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த மருத்துவர்கள் முயற்சி மேற்கொண்டனர். அதன்பிறகு மருத்துவர்கள் அவருக்கான எச்ஐவி சிகிச்சையை நிறுத்தினர். அவ்வாறு நிறுத்தி 14 மாதங்கள் ஆன நிலையிலும் அவரது உடலில் மீண்டும் எச்ஐவி வைரஸ் கண்டறியப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

5000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்பு கண்டெடுப்பு!

தொப்புள் கொடி ரத்த ஸ்டெம் செல்லை பயன்படுத்துவதில் பகுதியாக செல் ஒருமைப்பாடு இருந்தால் போதும் என்ற நிலையால் இதனை தானமாக பெறுவது எளிதாகும் எனவும், போன் மேரோ சிகிச்சை பெறுவோருக்கு செல்கள் ஒத்துப்போக வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்கும். ஆனால் தொப்புள் கொடி ரத்தத்தின் மூலம் பெறப்படும் ஸ்டெம் செல் சிகிச்சையில் இத்தகைய நிர்பந்தம் இல்லை எனவும் அப்பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எச்ஐவி தொற்றிற்கு ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் நிரந்தர குணமளிக்க முடியும் என அண்மையில் விஞ்ஞானிகள் நிரூபித்தனர். ஏற்கெனவே இருவர் இந்த முறையில் குணமடைந்த நிலையில் மூன்றாவதாக அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த பெண் அந்த தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு புற்றுநோயும் கண்டறியப்பட்டது. இதனால், அதற்கான haplo-cord transplant சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்பட்டது என்பது கவனித்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.