மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் – அரசு ஊழியர்கள் செம ஹேப்பி!

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், சிரோமணி அகாலி தளம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என, அக்கட்சித் தலைவர்ச சுக்பிர் சிங் பாதல் தெரிவித்து உள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர்
சரண்ஜித் சிங் சன்னி
தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, வரும் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில், மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், காங்கிரஸ் கட்சி படுதீவிரமாக செயலாற்றி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டு உள்ளார்.

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, புதுக்கட்சி தொடங்கிய கேப்டன் அமரீந்தர் சிங், பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளார். சுக்பிர் சிங் பாதல் தலைமையிலான சிரோமணி அகாலி தளம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின்
ஆம் ஆத்மி
கட்சியும் இந்தத் தேர்தலில் களம் காண்கிறது. பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சிக்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக பக்வந்த் மன் அறிவிக்கப்பட்டு உள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் – பாஜக உள்ளிட்ட கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் சுக்பிர் சிங் பாதல் பேசியதாவது:

சட்டப்பேரவைத் தேர்தலில், சிரோமணி அகாலி தளம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த உடனே, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதனால்
அரசு ஊழியர்கள்
மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் அடைவார்கள்.

மேலும், ஏழாவது ஊதியக் குழுவின் அனைத்து முரண்பாடுகளும் நீக்கப்படும். அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். அரசு ஊழியர்களின் நிலுவையில் உள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில், ஊழியர் நல வாரியத்தை அமைப்பதில் கட்சி உறுதியாக இருக்கிறது. தேர்தலில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய ஒரே கட்சி சிரோமணி அகாலி தளம் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.