BB Ultimate -17: `கல்யாணம் முக்கியம் குமாரு!' – நிரூப்புக்கு கிடைத்த அட்வைஸ்; வனிதாவின் புதிய உறவு!

“வேலன்டைன்ஸ் டே கொண்டாட்டம்’ என்கிற பெயரில் பிக் பாஸ் வீடு முழுக்க இன்று ஒரே அன்பு மயமாக இருந்தது. இத்தனை நாளாக முறைத்துக் கொண்டிருந்தவர்கள் கூட ‘நாம ஒரு குடும்பம்’ என்று கட்டியணைத்துக் கொண்டார்கள். ஆக அளவிற்கு மிஞ்சினால் அன்பும் ஒரு காமெடியாகி விடும் என்கிற விதமாக இந்த நெகிழ்ச்சி அளவில்லாமல் பெருகி ஓடிக் கொண்டிருந்தது. எது உண்மையான அன்பு, எது நிகழ்ச்சிக்காக காட்டப்படும் தற்காலிக அன்பு என்பதை கண்டுபிடிக்க முடியாமல் இரண்டறக் கலந்திருந்தது.

எபிசோட் 17-ல் நடந்தது என்ன?

ஒரு ரொமான்ஸான பாட்டைப் போட்டு எழுப்பி மக்களை வார்ம் – அப் செய்தார் பிக் பாஸ். “ஏய்.. நீ இங்க. வா.. நீ இங்க நில்லு.. இடுப்பை நல்லா நெளிச்சு வளைச்சு.. ஆடணும்.. தெரியுமா’ என்கிற பருத்தி வீரன் கார்த்தி மாதிரி, “நீ என்ன பண்றே.. அவன். எங்கே போனான்..?” என்று வீடெங்கும் உலவி நாட்டாமை செய்து கொண்டிருந்தார் தலைவர் வனிதா. “பாலா.. உன் துணியெல்லாம் பாத்ரூம்ல அப்படியே போட்டுட்டு வந்துடறே. அசிங்கமா இருக்கு. எடுத்து வெச்சுடுப்பா” என்று தாழ்வான குரலில் வனிதா கேட்க “ஹாங்.. ஹாங்.. பார்க்கலாம்’ என்கிற மாதிரி அலட்சியமாக தலையசைத்தார் பாலா.

நிரூப் – சுருதி

மைதா மாவை இறைத்து விளையாடிய குழந்தை

நிரூப் குழந்தைக்கு கோபம் வந்து அபிராமியிடம் காஃபி கேட்டு அடம்பிடித்து அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தது. பதிலுக்கு அபிராமியும் சற்று டென்ஷன் ஆனார். ‘குறும்புத்தனம் வேண்டும்’ என்று பிக் பாஸ் சொல்லி விட்டதால், மைதாமாவை எடுத்துக் கொண்டு ‘யார் தலையில் பூசலாம்’ என்று குழந்தை வீடெங்கும் அலைய “வேணாம்டா நிரூப்பு.. இப்பத்தான் நான் குளிச்சிட்டு வந்தேன்” என்று மக்கள் அலறி பதறினார்கள். அத்தனை கெஞ்சியும் சுருதியின் தலையில் மாவை தெளித்தார் நிரூப். ஆனால் பாலாவிடம் இந்த பாச்சா பலிக்கவில்லை. “என் மேலே மாவை போட்டா.. நானும் பதிலுக்கு போடுவேன்” என்று அவர் எச்சரிக்க,. ஹோலி கொண்டாட்டம் போல பரஸ்பரம் மாவை வீசி வீட்டை நாஸ்தியாக்கினார்கள்.

‘நிரூப்தான் க்ளீனிங் டீமோட கேப்டன்.. அவனே இதை சுத்தம் செய்யட்டும்” என்று அபிராமி டென்ஷன் ஆக “மாத்தேன் போ. முடியாது ஆன்ட்டி” என்று மறுத்தார் நிரூப். “என்னா.. பண்றது. குழந்தையா போயிட்டான்” என்று தாமரையே பின்னர் அதை சுத்தம் செய்தார். “சாப்பாட்டுப் பொருட்களை வீணாக்காதே” என்று குழந்தையிடம் கேட்டுக் கொண்டார்கள்.

BB Ultimate

கோயில் சுண்டல் போல் பரிமாறப்பட்ட இதயங்கள்

‘Empty your heart’ என்கிற தலைப்பில் அடுத்த டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். ஒவ்வொருவருக்கும் அவர்களின் உருவங்கள் பொறித்த 20 ஹார்ட்டுக்கள் வழங்கப்படும். நன்றி, பாராட்டு, பிடித்திருக்கிறது என்கிற பல்வேறு காரணங்களையொட்டி சக போட்டியாளர்களுக்கு அவற்றை அளிக்கலாமாம். ‘அட.. காரணமே இல்லாட்டியும் பரவாயில்லப்பா.. அன்பு செலுத்துங்கப்பா.. இன்னிக்கு வேலன்டைன்ஸ் டே’ என்று பின்குறிப்பில் எழுதியிருந்தார் பிக் பாஸ்.

ஹார்ட் சின்னத்தை சிக்கனமாக கொடுத்திருந்தால் மக்கள் கவனமாக பரிசீலித்துத் தந்திருப்பார்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் இருபது எண்ணிக்கையில் தந்துவிட்டதால் கோயில் சுண்டல் மாதிரி பார்ப்பவர்களிடம் எல்லாம் இறைத்துக் கொண்டிருந்தார்கள். “இந்தா ஒண்ணு வெச்சுக்க”.. “வேணாம்.. ஏற்கெனவே கொடுத்துட்டே”.. “பரவாயில்ல… இன்னொன்னு..வெச்சுக்க.. என்ன இப்ப?!” என்கிற மாதிரி இதயங்கள் கன்னாபின்னாவென்று இறைபட்டுக் கொண்டிருந்தன. “என்னதான் இருந்தாலும் நீங்க ஒரு குழந்தை வனிதா” என்று கொஞ்சியபடி வனிதாவிற்கு ஹார்ட் தந்தார் ஷாரிக்.

சினேகன்

“எனக்கு லாஸ்லியாவை ரொம்பப் பிடிக்கும். என் தங்கச்சியை நினைவுப்படுத்துவா.. அதற்கு அப்புறம் அந்தப் பதவியை உனக்குத்தான் தரேன்” என்று சென்ட்டி பேசி சுருதிக்குத் தந்தார் வனிதா. யாரிடமும் தராமல் தாக்குப் பிடித்து காத்திருந்து விட்டு முதல் ஹார்ட்டை தன் மனைவிக்கு சமர்ப்பணம் செய்தார் அபிநய். புதிதாக திருமணம் ஆகியிருந்த சிநேகன், தனியாகப் போய் உருகி வழிந்து கொண்டிருந்தார். “உன்னை விட எனக்கு உலகத்தில் எதுவுமே பெரிசில்ல.. என் நிழல் பிரிகிற நேரத்தில்கூட நீ என் கூட இருந்திருக்கே.. உன் குரலைக் கேட்கணும்” என்றெல்லாம் கலங்கி காமிராவின் முன் கேக் மாதிரி உருகிக் கொண்டிருந்த சிநேகனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

“கல்யாணம் முக்கியம் குமாரு”

ஃபுட்டேஜ் தேறவில்லையோ.. என்னவோ.. நிரூப் குழந்தைக்கு அபிநய் ‘ABCD’ சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த காட்சியையெல்லாம் அரைமணி நேரத்திற்கு காட்டிக் கொண்டிருந்தார்கள். நிரூப்பின் அண்ணன் ஷாரிக்காம். எனவே அவரும் வகுப்பில் அமர்ந்து ஏழரையைக் கூட்டிக் கொண்டிருந்தார். “Friday-க்கு அப்புறம் என்ன வரும். சொல்லு பார்க்கலாம்?” என்று அபிநய் கேட்க “எவிக்ஷன் வரும்” என்று சொன்னது புத்திசாலிக் குழந்தை. பிறகு நிரூப்பை தனியாக ஓரங்கட்டிய சிநேகன் ஒரு நீண்ட உருக்கமான உரையை நிகழ்த்தினார். அதன் சுருக்கமான செய்தி என்னவெனில் “சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்க.. திருமணம்தான் ஒரு மனிதனின் வாழ்க்கையை முழுமையாக்குகிறது” என்பதே. (நாலு வயசு குழந்தைக்கு கல்யாணமா?!)

‘மத்தவங்கள்லாம் ஹார்ட்டை எப்படி ஈஸியா கொடுத்துட்டாங்க. நீங்க ஒரு ஹார்ட்டை கொடுக்கறதுக்கு ஒரு மணி நேரம் வியாக்கியானம் பண்ணுவீங்களா?” என்று நிரூப்பின் மைண்ட் வாய்ஸ் அலறியிருக்கலாம். என்றாலும் சிநேகன் சொன்னதையெல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார். திருமணம் என்கிற தலைப்பில் சிநேகன் தந்த உபதேசம் எல்லாம் சிறந்த விஷயம்தான். ஆனால் திருமணம் என்பது மனிதனின் வாழ்க்கையில் ஒரு அத்தியாயமே தவிர, அதுவே முழுமையானதல்ல. “கடைசிக்காலத்தில் யாராவது வேணுமே” என்கிற நோக்கில் செய்து கொள்வது திருமணம் அல்ல. “சில காரணங்களால் நான் மிக தாமதமாக திருமணம் செய்து கொண்டேன். நீ அந்தத் தவறை செய்து விடாதே” என்று நிரூப்பிடம் வேண்டிக் கொண்ட சிநேகன் “இது என்னோட உருவம் பதிஞ்ச ஹார்ட் இல்ல. உணர்வு பதிஞ்சது’ என்கிற சென்டியான பன்ச்சோடு ஹார்ட்டை தந்தார்.

நிரூப் – சிநேகன்

“பிக் பாஸ். வேலன்டைன்ஸ் டேக்கு ஒரு கேக் உண்டா. ஒரு பாட்டு உண்டா. என் கெரகம்” என்று அபிநய் அனத்தி முடிப்பதற்குள் ஸ்டோர் ரூம் பெல் அடித்தது. உள்ளே ஹார்ட் வடிவத்தில் ஒரு பெரிய கேக் இருந்ததைப் பார்த்ததும் “சோறு.. சோறு.. சாமி.. சோறு போடுது” என்கிற கோவை சரளா மாதிரி மக்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். “வீட்டோட தலைவி நான்தான்… கேக்கை வெட்டுவேன்” என்பது மாதிரி நடுவில் நின்று கொண்டார் வனிதா. அவர் வெட்டி முடித்ததுமே துண்டுகள் வேக வேகமாக காலியாகின.

BB Ultimate

நைட்டி என்கிற ஆடை இன்னமும் அகலமாக இருந்தால் அதற்குப் பெயர் ‘Kaftan’ என்று பெயர் போல. வனிதாவின் இந்த ஆடையை எடுத்துப் போட்டுக் கொண்டு குடுகுடுப்பைக்காரன் மாதிரி வீட்டைச் சுற்றி வந்தார் ஷாரிக். “ஆன்ட்டி.. எனக்கும் அந்த டிரெஸ் வேணும்.. கறுப்புக்கலர்ல கொடுங்க. பூ போட்டது வேண்டாம்.. இந்தக் கலர் வேண்டாம்” என்று நிரூப் மாற்றி மாற்றி கேட்க, தி.நகர் ரங்கநாதன் தெரு கடையையே சூட்கேஸில் வைத்திருந்த வனிதா, அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தந்தார். விநோதமான ஆடையுடன் WWF சண்டையில் ஈடுபடும் போர் வீரன் மாதிரி மாறினார் நிரூப். சிநேகனையும் வலுக்கட்டாயமாக இந்த இம்சையில் தள்ளினார்கள். எனவே அவரும் இந்த ‘கப்தானை’ அணிந்து கொண்டு வர “உங்களுக்குத்தான் ரொம்ப நல்லா இருக்கு” என்று மக்கள் புகழ்ந்தார்கள். (இந்த சீசன்ல இன்னமும் என்னென்ன கொடுமையையெல்லாம் பார்க்க வேண்டியிருக்குமோ?!).

அபிராமி + ஜூலி – ஆறாக ஓடிய பாசம்

‘நாயகன்’ திரைப்படத்தில் வேலு நாயக்கரின் மகன் இறந்ததும் “பாய்.. மேரா பேட்டா.. துமாரா பேட்டா” என்று ஒரு கூட்டாளி ஆறுதல் சொல்வார். இந்தக் காட்சியைப் போல அபிராமியும் ஜூலியும் வாசப்படியில் அமர்ந்து சென்டிமென்ட்டை உருக்கி ஊற்றி ஆறாக வழிய விட்டுக் கொண்டிருந்தார்கள். “இனிமே எங்க அப்பாதான் உங்க அப்பா.. என் குடும்பம்தான் உன் குடும்பம்.. எங்க வீட்டுக்கு வா.. ஆடலாம். பாடலாம். சாப்பிடலாம். நீதான் என் குட்டிப் பிசாசு” என்று ஜூலி கண்கலங்கி சொல்ல “ஜூலி நீ ஒரு பரிசுத்தமான ஆன்மா. ஆனா இந்த ரகசியம் ஊருக்குத் தெரியல” என்று அபிராமியும் பதிலுக்கு நெகிழ்ந்து கொண்டிருந்தார். “ரெண்டு ஆன்ட்டியும் என்ன பண்றீங்க?” என்று நிரூப் குழந்தை வந்து கேட்டு இந்த நெகிழ்ச்சி மூடை கலைக்க விரும்பினாலும் அது நடக்கவில்லை. இருவரும் மந்திரித்து விட்ட கோழிகள் மாதிரியே ஒருவரையொருவர் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

‘காத்துவாக்குல ஒரு பலூன்’ என்று சமீபத்திய படத்தின் டைட்டிலை திருடி உடைத்து தலைப்பாக வைத்து அடுத்த டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். தனக்குப் பிடித்த போட்டியாளரோடு ஒருவர் கூட்டணி சேர வேண்டுமாம். இருவரின் இடுப்பிலும் கயிறு கட்டப்படுமாம். ஒரு பலூன் தரப்படும். இருவரும் மாறி மாறி அந்தப் பலூனை கையால் தட்டிக் கொண்டிருக்க வேண்டும். யாருடைய பலூன் நெடு நேரம் கீழே விழாமல் இருக்கிறதோ, அவர்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறதாம். (இந்த டாஸ்க்கிற்குள் ஒரு தத்துவம் இருக்கிறது. எந்த உறவாக இருந்தாலும் அது வெறும் காற்றடைத்த பை மாதிரிதான். எப்போது வேண்டுமானாலும் புட்டுக்கும் என்பதே இதன் உட்பொருள்).

வனிதா – சுருதி

உடைந்து போன பலூன்கள்

தாண்டியா ஆடுவது போல பலூனை மிருதுவாக தட்டி ஆடினார்கள். “பிடிச்சு பிடிச்சு விடக்கூடாது. தட்டணும்” என்று எச்சரித்தார் பிக் பாஸ். முதலில் அவுட் ஆனது பாலாஜி – சிநேகன் ஜோடி. பாலாவும் அனிதாவும் விளையாடிதில் அவர்களின் பலூன் பறந்து வீட்டிற்கு வெளியே போய் விட்டது. (நல்ல குறியீடு!). நெடுநேரத்திற்கு தாக்குப் பிடித்துக் கொண்டிருந்த வனிதா –சுருதி பலூன் ஒரு கட்டத்தில் ‘டப்’பென்று உடைந்து விட்டது. அதையும் தாண்டி விளையாடிய பாலா – தாமரையின் பலூனும் ஒரு கட்டத்தில் பணால். இறுதி வரைக்கும் மிருதுவாக தட்டி விளையாடிய அபிராமி – ஜூலி அணி வெற்றி. “நான் அப்பவே சொல்லல.. எல்லாத்துலயும் ஒரு காரணம் இருக்கும்” என்று ஜூலி உருக்கமாக சொல்லிக் கொண்டிருந்தார். (முடியல).

ஜூலி – அபிராமி

“பாலா.. எங்க ஆட்டத்தைக் கெடுத்துட்டான் பிக் பாஸ்” என்று வனிதா புகார் செய்ய, அதை சட்டையே செய்யாத பிக் பாஸ் “ஜெயிச்சது யாருன்னு சொல்லுங்க” என்று வாக்குமூலத்தை வனிதாவின் வாயிலிருந்து பிடுங்கினார்.

ஆக… இன்று ஒரு நாள்.. பிக் பாஸ் வீட்டில் அன்பு பெருக்கெடுத்து ஓடியது. நாளை முதல் மறுபடியும் ரணகளம் திரும்பும் என்று நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்திருப்போம். நம்பிக்கைதானே வாழ்க்கை?!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.