சூடான பிரச்சாரம்; கூலான சந்திப்பு: கே.என்.நேரு- ஹெச்.ராஜா பேசியது என்ன?

Tamilnadu Election Campaign Update : தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவடைந்த நிலையில். திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மற்றும் திமுக அமைச்சர் கே.என்.நேரு சந்தித்து பேசியது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நாளை மறுநாள் ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக கடந்த ஒரு மாதமாக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் சுற்றியுள்ள பகுதிகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதில் பேசிய அவர். திமுக ஆட்சி காலத்தில் ரவுடித்தனம் செய்தார்கள் கோயில்களை இடிக்கிறார்கள் என்றுதான் மக்கள் அதிமுகவிற்கு வாக்களித்தனர். ஆனால் அதிமுக எப்போதுமே வாயை மூடிக் கொண்டிருப்பதால், மீண்டும் திமுகவிக்கு வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 55 வருடங்களாக மாறி மாறி இவர்களே ஆட்சி செய்து வருகின்றனர். தர்மத்தை காக்க இந்த முறை பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.

மேலும் திமுக அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது. தமிழக அரசின் நிர்வாகம் முழுவதும் மதமாற்றம் செய்யும் நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இந்த கோயில்கள் அனைத்தும் இடிக்கப்படுகிறது. 1967-ல் இருந்து வந்த தீய சக்திகள் இந்துக்களுக்கு எதிராக செயல்படுகின்றன. ஆயிரத்திற்கும் மேலான சர்ச்சுகள் மற்றும் மசூதிகள் நீர்நிலைகளில் உள்ளது முடிந்தால் அதை அப்புறப்படுத்தவும்.

இந்துக்களின்உணர்வுகளோடு விளையாடாதீர்கள். வெறும் இரண்டரை சதவீதம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளீர்கள். தூக்கி எறிய வெகுநாள ஆகாது. குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் என்பது மக்களை ஏமாற்றும் செயல் மக்கள் ஏமாற மாட்டார்கள். சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் பொது உதயநிதி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சொன்னார்கள் அதை நம்பி வாக்களித்த மக்களை தற்போது ஏமாற்றிவிட்டார்கள்.

நீங்கள் எங்களை ஒன்றிய அரசு என்று கூறினால் நாங்கள் உங்களை மனநலம் குன்றிய அரசு என்றுதான் சொல்வோம். இனி வலைதளங்களில் அப்படியே பதிவு செய்யுங்கள். ஊழலும் திமுகவும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள். பொங்கல் பரிசு வழங்கிய 1500 கோடியில் 500 கோடி கொள்ளையடித்துவிட்டார்கள். 10 வருடங்களாக ஆட்சியில் இல்லாத காரணத்தால் தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் கொள்ளையடித்து வருகிறார்கள். தடுப்பூசி மூலம் தொற்று பரவலில் இருந்து நம்மை காப்பாற்றிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். என்னன்றி கொனறார்க்கும் உய்வுண்டாம் என்ற திருக்குறளை சொல்லி தாமரைக்கு வாக்களிக்கவில்லை என்று பாவம் என்றும் பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லிக்கொண்டே தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார்.

இந்த பிரச்சாரம் முடிந்து ஹெச்.ராஜா அங்கிருந்து சென்றபோது, ​​திமுக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு பிரச்சாரத்திற்காக அங்கு வந்தார். அப்போது அவர் எச்.ராஜாவும் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டிருக்கும் நிலையில், பாஜக வேட்பாளரிடம் தேர்தல் பிரச்சாரம் குறித்து கே.என்.நேரு கேட்டறிந்தார்.

பிரச்சாரத்தில் திமுக குறித்து கடுமையாக விமர்சனம் செய்த ஹெச்.ராஜா, அந்த பிரச்சாரம் முடிந்தவுடன் திமுக அமைச்சர் ஒருவருடன் நட்பு பாராட்டும் விதமாக பேசியது வைரலாக பரவி வரும் நிலையில், இதில் எச்.ராஜா பிரச்சாரத்தில் பேசியது உண்மையா அல்லது கே.என்.நேருவிடம் பேசியது உண்மையா என்ற மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.