இடியாப்ப சிக்கலில் சிக்கி தவிக்கும் மலையாள படங்களின் ரிலீஸ்

கொரோனாவின் இரண்டு அலைகள் காரணமாக மொத்த திரையுலகிலும் பட தயாரிப்பில், படப்பிடிப்பு நடத்துவதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துவிட்டன.. அதிலும் குறிப்பாக மலையாள திரையுலகில் இடியாப்ப சிக்கல்கள் போல, முன்னால் ஆரம்பித்த படப்பிடிப்புகள் தேங்குவதும், பின்னால் ஆரம்பித்த படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் ஆவதும் என திருவிழாவில் கப் அன்ட் சாசர் ராட்டினத்தில் ஏறி அமர்ந்தது போல போல குழம்பி தவிக்கின்றது. இதில் அதிகம் சிக்கிக்கொண்டவை மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் படங்கள் தான்.

பிரித்விராஜ், ஷாஜி கைலாஷ் கூட்டணியில் கடுவா என்கிற படம் கடந்த 2019ல் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அந்தப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்போ தற்போதுதான் துவங்கியுள்ளது. ஆனால் இந்த இடைவெளியில் இயக்குனர் ஷாஜி கைலாஷ் மோகன்லாலை வைத்து அலோன் என்கிற ஒரு படத்தையே இயக்கி முடித்து ரிலீஸுக்கும் தயார்படுத்தி விட்டார்.

ஹீரோ பிரித்விராஜோ, இந்த இடைவெளியில் குருதி, கோல்ட் கேஸ் படங்களில் நடித்ததோடு, புரோ டாடி என்கிற படத்தை இயக்கி அதில் இன்னொரு ஹீரோவாகவும் நடித்து இந்த மூன்று படங்களையும் ரிலீஸ் செய்தும் விட்டார்..

அதேசமயம் கடந்த பிப்ரவரியிலேயே படப்பிடிப்பு முடிவடைந்த பிரித்விராஜின் ஜனகனமன பட ரிலீஸ் குறித்து இப்போதுவரை எந்த தகவலும் இல்லை. இதற்கெல்லாம் ஹைலைட்டாக நான்கு வருடங்களுக்கு மேலாக இவரது ஆடுஜீவிதம் படம் தயாரிப்பில் இருந்துகொண்டே இருக்கிறது.. இன்னும் நாற்பது சதவீத படப்பிடிப்பு பாக்கி இருக்கிறதாம்.

அதேபோல இயக்குனர் ஜீத்து ஜோசப் கொரோனா முதல் அலை துவங்குவதற்கு முன்னதாக மோகன்லாலை வைத்து ராம் என்கிற படத்தை இயக்க ஆரம்பித்தார். வெளிநாட்டில் பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் கொரோனா தாக்கம் விஸ்வரூபம் எடுக்கவே அதை அப்படியே தள்ளிவைத்து விட்டு த்ரிஷ்யம்-2 படத்தை இயக்கி ரிலீஸும் செய்துவிட்டார்.

அதன்பிறகு மோகன்லாலை வைத்தே ட்வல்த் மேன் என்கிற படத்தையும் இயக்கி முடித்துவிட்டு, இப்போது மலையாள இளம் ஹீரோவான ஆசிப் அலியை வைத்து அடுத்த படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார்.

மோகன்லாலின் பட வரிசையையும் இந்த கொரோனா அலை விட்டு வைக்கவில்லை. கடந்த வருடமே இந்த ட்வல்த் மேன் மற்றும் ஷாஜி கைலாஷ் இயக்கிய அலோன், வைசாக் இயக்கிய மான்ஸ்டர் ஆகிய படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.