இந்திய மகளிர் கிரிக்கெட் அப்டேட்.. உலகக் கோப்பை ஹாக்கி அட்டவணை.. மேலும் செய்திகள்

ஒரு நாள் தொடர்: தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து மகளிர்

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள்  கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

நியூசிலாந்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரே ஒரு டி20 ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து மகளிர் அணி வெற்றி பெற்றது.

இதையடுத்து 5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் இரண்டு ஒரு நாள் ஆட்டங்களிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இதன்மூலம் தொடரை 3-0 எனஅற கணக்கில் அந்த அணி கைப்பற்றியது.

குயின்ஸ்டவுனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் விளையாடி இந்தியா 279 ரன்கள் சேர்த்தது.

தொடக்க ஆட்டக்காரர்களான சபினேனி மேகனாவும், ஷஃபாலி வர்மாவும் அரை சதம் பதிவு செய்தனர்.

இதையடுத்து களம் இறங்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். கேப்டன் மிதாலி ராஜ் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தீப்தி சர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்களை பதிவு செய்தது இந்தியா.

280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 49.1ஆவது ஓவரில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

அந்த அணியில் அதிகபட்சமாக அமெலியா கெர் (67 ரன்கள்), எமி சட்டவைட் (59 ரன்கள்), லாரென் டவுன் (64 ரன்கள்) எடுத்தனர்.

அதிகபட்சமாக இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இரு அணிகளுக்கு இடையிலான 4-ஆவது ஒரு நாள் ஆட்டம்  வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஆஸி.க்கு எதிராக இன்று 4-ஆவது டி20: ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை அணி இன்று அந்நாட்டு கிரிக்கெட் அணியை 4-ஆவது டி20 ஆட்டத்தில் சந்திக்கிறது.

முதல் 3 டி20 ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா.

முதல் ஆட்டத்தில் டிஆர்எஸ் முறையிலும், இரண்டாவது ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முறையிலும் ஆஸ்திரேலியா வெற்றி கண்டது.

மூன்றாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி. வென்றது.

இந்நிலையில், மெல்போர்ன் நகரில் 4-ஆவது டி20 ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் இலங்கை விளையாடவுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: திணறும் தென்னாப்பிரிக்கா

நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது.

நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட் ஆட்டங்களில் தென்னாப்பிரிக்கா விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் ஆட்டம் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசி. அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதல்  இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 49.2 ஓவர்களுக்கு வெறும் 95 ரன்களே எடுத்தது தென்னாப்பிரிக்கா.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி 2-ஆவது நாளான இன்று 482 ரன்கள் சேர்த்தது.

387 ரன்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி தென்னாப்பிரிக்கா விளையாடத் தொடங்கியது.

2-ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 9 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்து 353 ரன்கள் பின்னலையில் உள்ளது தென்னாப்பிரிக்கா.

நியூசி., வேகப்பந்துவீச்சாளர் டிம் சவூதி 2 விக்கெட்டுகளையும், மாட் ஹென்றி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

கேப்டன் டீன் எல்கர், சரெல் எர்வீ ரன் எதுவுமின்றி அவுட்டானார்கள். எய்டன் மார்க்ரம் 2 ரன்களில் நடையைக் கட்டினார். டுசனும், டெம்பா பவுமாவும் களத்தில் உள்ளனர்.

மகளிர் உலக கோப்பை: ஹாக்கி  அட்டவணை வெளியீடு..!

15-ஆவது உலக கோப்பை மகளிர் ஹாக்கி போட்டி ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்தில் ஜூலை 1-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 

இதற்கான போட்டி அட்டவணையை சர்வதேச ஹாக்கி சம்மேளம் நேற்று வெளியிட்டது. இந்திய அணி ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கிறது.

இங்கிலாந்து, நியூசிலாந்து, சீனா ஆகிய நாடுகளின் அணிகளும் அந்த பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜூலை 3-ஆம் தேதி இங்கிலாந்தை சந்திக்கிறது. 

இது குறித்து இந்திய கோல் கீப்பர் சவிதா கூறுகையில், ‘இது கடினமான பிரிவு. இங்கிலாந்து (தரவரிசையில் 3-வது இடம்), நியூசிலாந்து (8-வது இடம்) எங்களை விட தரவரிசையில் முன்னணியில் உள்ளது. சீனா எப்போதும் ஆச்சரியம் அளிக்கக்கூடிய அணி. எதிரணியை பற்றி கவலைப்படாமல் ஒரு அணியாக நமது திறமை மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம்’ என்றார்.

ஆசிய டீம் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி:

இந்திய அணிக்கு முதல் வெற்றி

ஆசிய டீம் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஹாங்காங்கை 3-2 என்ற செட் கணக்கில் இந்தியா வீழ்த்தியது. இதன் மூலம் முதல் வெற்றியை இந்தியா பதிவு செய்தது.

ஆசிய டீம் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் (ஏ பிரிவு) இந்திய அணி, ஹாங்காங்கை எதிர்கொண்டது.  

ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் லக்‌ஷயா சென், மிதுன் மஞ்சுநாத் ஆகியோரும், இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஹரிகரன் அம்சகருணன்-ரூபன் ரத்தினசபாபதி குமார் ஜோடியும் வெற்றி கண்டனர். ஒற்றையர் பிரிவில் கிரண் ஜார்ஜூம், இரட்டையர் பிரிவில் மஞ்சித் சிங் கவாய்ராக்பாம்-டிங்கு சிங் கோந்துஜாம் இணையும் தோல்வி அடைந்தது. 

IND VS WI: ஸ்ரேயாஸ்-க்கு இடம் இல்லை; தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!

முதலாவது ஆட்டத்தில் 0-5 என்ற கணக்கில் தென்கொரியாவிடம் இந்தியா தோல்வி அடைந்திருந்தது.

இந்திய அணி இன்று நடைபெறும் தனது கடைசி லீக்கில் நடப்பு சாம்பியன் இந்தோனேஷியாவை சந்திக்கிறது. இதில் இந்திய அணி முழுமையாக வெற்றி பெறுவதுடன், தென்கொரியா அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஹாங்காங்கிடம் தோற்றால் தான் ‘நாக்-அவுட்’ சுற்றுக்குள் நுழைய முடியும்.

தொடக்க ஆட்டத்தில் மலேசியாவிடம் தோல்வி கண்ட இந்திய மகளிர் அணி இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜப்பானுடன் மோதுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.