கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்… என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளைப் பாதுகாப்பதற்கான பெட்டகத்தை 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் அமைக்க வேண்டும் என்று 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினரான சு.வெங்கடேசன், கூடங்குளம் அணுஉலை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு, மத்திய இணையமைச்சர் ஜிதேந்திரசிங் அளித்த பதிலில், “கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகள் முதலில் சில ஆண்டுகள் அணு உலைகளுக்குள் உள்ள தொட்டியில் பாதுகாக்கப்பட்டு, பிறகு மறுசுழற்சி மையத்துக்கு எடுத்துச்செல்லப்படும். அதுவரை, அருகில் உள்ள மையத்தில் அணுக்கழிவுகள் வைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம்

கூடங்குளத்தில் 1000 மெகாவாட் கொண்ட இரண்டு அணுமின் நிலைய அலகுகள் செயல்பட்டு வருகின்றன. 3-வது, 4-வது அலகுகள் அமைக்கும் பணி 2017 ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 5-வது, 6-வது அலகுகள் அமைக்கும் பணி அண்மையில் தொடங்கியது. 1-வது, 2-வது உலைகளிலிருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை உலைக்கு அருகிலேயே சேமித்துவைப்பதற்கான வசதியை ஏற்படுத்த தேசிய அணுமின் கழகம் திட்டமிட்டிருந்தது.

அதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெற பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் 2019-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதற்கு அரசியல் கட்சிகள், பொதுமக்கள் உள்பட பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து, கருத்துக் கேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தற்போது, 3-வது மற்றும் 4-வது உலைகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதனுடன் சேர்த்து அந்த உலைகளில் உண்டாகும் அணுக்கழிவுகளை உலைக்கு அருகிலேயே சேமித்துவைப்பதற்கான வசதியையும் கட்டமைக்கும் நடவடிக்கைகளை தேசிய அணுமின் கழகம் செய்து வருகிறது.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடுத்த வழக்கில், 2013-ம் ஆண்டு அணு உலையை இயக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது. அதில், ஐந்து ஆண்டுகளுக்குள் அணுக்கழிவுகளைப் பத்திரமாக வைக்கும் ஆழ்நில கருவூலம் ஒன்றை இந்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

கூடங்குளத்தில் மக்கள் போராட்டம்

தேசிய அணுமின் சக்தி கழகம் 2014-ம் ஆண்டு மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. அப்போது, கூடங்குளம் அணு உலையில் இருந்து வெளிவரும் கழிவுகளை ஏழு ஆண்டுகள் வரைக்கும் அணு உலைக்கு கீழே இருக்கும் தொட்டியில் வைத்து பாதுகாக்க முடியும் என்றும், அதற்குப் பின்னர் அணு உலையில் இருந்து சற்று அப்பால் ஓர் அமைப்பை ஏற்படுத்தி, அதில் சில ஆண்டுகள் வரை அணுக்கழிவுகளைப் பாதுகாத்து வைக்க முடியும் என்று கூறியது.

எனவே, இன்னும் சில பத்தாண்டுகளுக்கு ஆழ் நிலை கருவூலம் அமைப்பதற்கான அவசியம் இருக்காது என்றும் அணுமின் கழகம் கூறியது. அதே நேரத்தில், ஆழ்நிலை கருவூலம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கை வேகமாக எடுக்கப்பட்டு வருகிறது என்றும் உச்ச நீதிமன்றத்தில் அணுமின் கழகம் தெரிவித்தது.

ஐந்தாண்டுகள் காலஅவகாசம் 2018-ம் ஆண்டு முடிந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தை தேசிய அணுமின் கழகம் மீண்டும் அணுகியது. அப்போது, கூடங்குளத்தில் அணுக்கழிவு பெட்டகத்தை ஏற்படுத்துவதில் பல தொழில்நுட்ப சவால்கள் இருப்பதால் மேலும் ஐந்து ஆண்டுகள் கால அவகாசம் வேண்டும் என்று அணுமின் கழகம் கோரியது. அதற்கு அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், ஐந்து ஆண்டுகள் கால அவகாசம் வழங்கியது. மேலும், அந்த காலஅவகாசத்துக்குள் கட்டாயம் அணுக்கழிவு பெட்டகத்தை கட்டி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் 2019-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது. ஆனால், இந்தத் திட்டத்துக்கு கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட கிராம மக்களும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்ததால், கருத்துகேட்புக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

சு.வெங்கடேசன்

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் மதுரை தொகுதி எம்.பி-யான சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில், ‘கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகள், முதலில் சில ஆண்டுகள் அணு உலைகளுக்குள் இருக்கும் தொட்டியில் பாதுகாக்கப்பட்டு, பிறகு மறுசுழற்சி மையத்துக்கு எடுத்துச்செல்லப்படும்வரை அருகில் உள்ள மையத்தில் வைக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தார்.

மேலும், “இந்தியாவில் பயன்படுத்தப்படும் அணு உலைத் தொழில்நுட்பத்தால், மிகக் குறைந்த அளவே அணுக்கழிவு உருவாகும். அவற்றை பிரித்தெடுப்பதாலும், எரித்துவிடுவதாலும் கழிவின் அளவு மிகவும் குறைகிறது. ஆகவே, உடனடியாக ஆழ்நில அணுக்கழிவு மையம் தேவையில்லை” என்று ஜிதேந்திர சிங் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, ‘மத்திய இணை அமைச்சரின் பதில் மூலமாக, கூடங்குளம் போன்ற அணு உலைகளிலிருந்து வரக்கூடிய அணுக்கழிவுகளை கையாள்வதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிடம் இல்லை என்பதை அமைச்சர் மறைமுகமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்’ என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், கூடங்குளத்தில் அணுக்கழிவுகளைச் சேமித்து வைப்பதற்கான திட்டம் எதையும் செயல்படுத்தக் கூடாது என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

“கூடங்குளம் அணு உலை வளாகத்தின் மொத்தப் பரப்பு 13 சதுர கிலோ மீட்டர். அதற்குள் ஆறு அணு உலைகள், கடல்நீரை நன்னீராக்கும் ஆலை, அணுக் கழிவை மறுசுழற்சி செய்யும் ஆலை ஆகியவை போக, இப்போது அணுக் கழிவு மையத்தையும் அமைப்பது ஆபத்தானது” என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணப்பாளரான சுப. உதயகுமார் கூறியிருக்கிறார்.

சுப.உதயகுமார்

மேலும், “இந்த அணுக்கழிவு மையத்தில் ஒட்டுமொத்தமாக 4,328 உருளைகளை வைக்க முடியும் என்று சொல்கிறார்கள். அப்படியானால், இதிலிருந்து கதிர்வீச்சும் வெப்பமும் எந்தளவுக்கு இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அணு உலைக்குக் கீழே கழிவுகளை வைத்திருப்பதால், கண்காணிப்பும் பாதுகாப்பும் இருக்கும். ஆனால், உலைக்கு வெளியே அதே அளவு கண்காணிப்பு இருக்குமா என்பதைச் சொல்ல முடியாது. அதனால், தண்ணீரிலும் காற்றிலும் கதிர்வீச்சு பரவலாம்” என்று சுப.உதயகுமார் கூறுகிறார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், “கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட இரண்டு அணு அலகுகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், மூன்று மற்றும் நான்காவது அணு அலகுகள் அமைக்கவும் இந்திய அணுசக்திக் கழகம் அனுமதி அளித்துள்ளது. அணு உலைகளில் இருந்து உற்பத்தியாகும் கழிவுகளை உலைக்கு வெளியே சேமித்து வைப்பதற்கான `Away From Reactor’ மையத்தை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டபோது இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், மூன்றாவது மற்றும் நான்காவது அணு அலகுகள் நடைமுறைக்கு வந்தபிறகு, அதிலிருந்து வெளியேறும் அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே சேமித்து வைப்பதற்கான Away From Reactor மையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி விளம்பரம் இணையதளம் வழியாக இந்திய அணுசக்திக் கழகம் வெளியிட்டது. அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் 24-02-2022 அன்று திறக்கப்படவுள்ளன. இது மிகுந்த கவலை அளிக்கக்கூடியது. மேலும் உள்ளூர் மக்களை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கும் செயலாகும்.

பன்னீர்செல்வம்

தற்போது, அணுமின் நிலைய வளாகத்திற்குள்ளேயே கழிவுகளை சேமித்து வைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கதிர்வீச்சு தண்ணீரிலும், காற்றிலும் பரவி பல விதமான நோய்களுக்கு அப்பகுதி மக்கள் ஆளாவார்கள் என்றும், மிகுந்த ஆபத்தானது என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அணுக்கழிவு மையம் அமைக்கப்படுவதை தொடக்கத்திலேயே எதிர்க்காமல் தி.மு.க அரசு மவுனமாக காத்து வருவதைப் பார்த்தால், இத்திட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டதோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது. மக்களுக்காகத்தான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் அல்ல. கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைவதை தமிழ்நாடு முதலமைச்சர் தடுத்து நிறுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.

இது தொடர்பாக அரசியல் கட்சிகளும், சுற்றுச்சூழல் அமைப்புகளும் பொதுமக்களும் எழுப்பியுள்ள கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் வெளிப்படையாக விளக்கம் அளித்து, அனைத்துத் தரப்பினரின் அச்சத்தைப் போக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.