நான் தீவிரவாதியா.. அப்புறம் ஏன் மோடி கைது பண்ணலை?.. கெஜ்ரிவால் கிண்டல்

என்னைத் தீவிரவாதி என்று பாஜகவினர் சொல்கிறார்கள். இது மிகப் பெரிய காமெடி.. நான் தீவிரவாதி என்றால் ஏன் என்னை பிரதமர் விட்டு வைத்திருக்கிறார், கைது பண்ண வேண்டியதுதானே என்று ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான
அரவிந்த் கெஜ்ரிவால்
கேட்டுள்ளார்.

பஞ்சாப் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. இங்கு வருகிற 20ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு கெஜ்ரிவால் தனது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

பலரும் சேர்ந்து கொண்டு என்னைத் தீவிரவாதி என்று சொல்கின்றனர். இது மிகப் பெரிய காமெடி. சிரிப்புதான் வருகிறது. நான் தீவிரவாதியாக இருந்தால், பிரதமர் ஏன் என்னை கைது செய்யவில்லை. உலகத்திலேயே மிகவும் இனிமையான தீவிரவாதி நான்தான். இந்தத் தீவிரவாதிதான் பள்ளிகள், மருத்துவமனைகள், மின்சாரம், சாலை, குடிநீர் என மக்களுக்கு வசதிகள் செய்து கொடுத்தான்.

நாட்டை பிளவுபடுத்த நான் முயற்சிப்பதாக சொல்கிறார்கள். நாட்டைப் பிரித்து அதில் ஒரு நாட்டுக்கு நான் பிரதமர் ஆகி விடத் திட்டமிடுகிறேனாம். நாட்டின் பாதுகாப்பையே கேலிக்கூத்தாக்கி வருகின்றன பெரிய கட்சிகள். பாதுகாப்புப் படைகள் என்ன செய்து கொண்டுள்ளன.

இரண்டு
தீவிரவாதிகள்
உள்ளனர். ஒரு தீவிரவாதி நாட்டு மக்களிடையே பயத்தை பரப்புவான்.. இன்னொரு தீவிரவாதி ஊழல்வாதிகளுக்கு பயத்தை ஏற்படுத்துவான். இன்று ஊழல்வாதிகள் எல்லாம் எனக்கு எதிராக அணி திரண்டுள்ளனர். அவர்களுக்கு ராத்திரியில் சரியாக தூங்க முடியவில்லை. என்னைப் பற்றியே கனவு காண்கிறார்கள்.

100 வருடத்திற்கு முன்பு பகத்சிங்கை தீவிரவாதி என்றார்கள். இன்று 100 வருடங்களுக்குப் பின்னர் பகத் சிங்கை பின்பற்றுபவரை தீவிரவாதி என்று சொல்கின்றனர். அனைத்துக் கட்சிகளும் ஆம் ஆத்மிக்கு எதிராக திரண்டுள்ளன. அக்கட்சி பஞ்சாபில் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க முயல்கின்றனர் என்றார்.

முன்னதாக ஆம் ஆத்மி கட்சியில் முன்பு இருந்தவரான குமார் விஷ்வாஸ் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், பஞ்சாபை தனி நாடாக்கக்கோரிய தடை செய்யப்பட்ட இயக்கமான
காலிஸ்தான்
இயக்கத்துக்கு கெஜ்ரிவால் ஆதரவாக இருப்பதாகவும், காலிஸ்தான் தனி நாடு உருவாக அவர் ஆதரவு தெரிவித்ததாகவும் கூறியிருந்தார்.

இதையடுத்து பாஜக, காங்கிரஸ் என இரு கட்சிகளும் கெஜ்ரிவாலைக் குறி வைத்து விமர்சித்து வருகின்றன என்பது நினைவிருக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.