5 மணி நிலவரம்- சென்னையில் 41.68 சதவீத வாக்குப்பதிவு

சென்னை:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்து. 8 மணிக்கு பிறகு வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்தது. எனினும், எதிர்பார்த்த அளவிற்கு வாக்குகள் பதிவாகவில்லை. 
பிற்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் சராசரியாக 35.34 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன. 3 மணி நிலவரப்படி 47.18 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. மாநகராட்சிகளில் – 39.13%, நகராட்சிகளில் – 53.49%, பேரூராட்சிகளில் – 61.38% வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. 
5 மணியில் இருந்து 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்களுக்கு வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. எனவே 5 மணிக்கு பொது வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்தது. 5 மணிக்கு பிறகு வாக்களிக்க வந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. 5 மணிக்கு முன் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. 
இந்நிலையில் மாலை 5 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது. சென்னை மாநகராட்சி தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 41.68% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆவடி மாநகராட்சியில் 5 மணி நிலவரப்படி 45.98 சதவீதம், புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியில் 43 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.