இந்தியா தொடர்ந்து 9 போட்டிகளில் வெற்றி! சாதித்து காட்டிய ரோஹித் ஷர்மா


மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம், இந்திய அணி டி20 போட்டியில் தொடர்ந்து 9 ஆட்டங்களில் வென்று, சர்வதேச டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 தொடரை இந்திய அணி வென்றுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தில் இதுவரை மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை.

3-வது போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், அவேஷ் கான் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு ரோகித் சர்மா வாய்ப்பு வழங்கினார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் துடுப்பாட்ட களமிறங்கினார். ருத்துராஜ் 4 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இதனையடுத்து ஸ்ரேயாஸ் 16 பந்துகளில் 25 ஓட்டங்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.

இஷான் கிஷன் 31 பந்துகளில் 34 ஓட்டங்கள் சேர்த்தார். நடுவரிசையில் களமிறங்கிய ரோகித் சர்மா 15 பந்துகளை எதிர்கொண்ட 7 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். இதனையடுத்து இந்திய அணி 93 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.

இதனையடுத்து சூர்யகுமார் யாதவ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர். குறிப்பாக சூரியகுமார் குமார் யாதவ் தனது டிரெட் மார்க் ஷாட் மூலும் சிக்சர்களை பறக்கவிட்டார். 27 பந்துகளில் அவர் அரைசதம் விளாசினார்.

மறுமுனையில் தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக ஆடி சூரியாவுக்கு நல்ல ஆதரவு வழங்கினார். இந்த ஜோடி கடைசி 5 ஓவரில் 86 ஓட்டங்கள் விளாசியது. சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 65 ஓட்டங்கள் சேர்த்தார். இதில் 7 சிக்சர்கள் அட்ங்கும். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 184 ஓட்டங்கள் குவித்தது.

185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் தொடக்க வீரர் கெயில் மெயர்ஸ், 6 ஓட்டங்களிலும், ஹோப்ஸ் 8 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதிரடியாக ஆடிய பொவேல் 14 பந்துகளில் 25 ஓட்டங்கள் சேர்த்து ஹர்சல் பட்டேல் பந்துவீச்சில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொலார்ட், ஹோல்டர் ஆகியோரும் அடுத்தடுத்து ஏமாற்றினர்.

ஒரு முனையில் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரான், அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

அவருக்கு ரோமேனிய செஃபர்டும் உறுதுணையாக நின்று அதிரடியை காட்ட ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. எனினும் நிக்கோலஸ் பூரான் 61 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தில் தூக்கி அடித்து கேட்ச் ஆனார்.

கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 31 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது, ஹர்சல் பட்டேல், தனது அனுபவ பந்துவீச்சு மூலம் செஃபர்ட் விக்கெட்டை காலி செய்தார். அந்த ஓவரில் 9 ஓட்டங்கள் மட்டுமே ஹர்சல் விட்டு கொடுக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 23 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ஷர்துல் தாக்கூர் 5 ஓட்டங்கள் மட்டுமே விட்டு கொடுத்தார். இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 167 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இதன் மூலம், இந்திய அணி டி20 போட்டியில் தொடர்ந்து 9 ஆட்டங்களில் வென்று, சர்வதேச டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.