உ.பி.யில் மதம்மாறிய வசீம் ரிஜ்வீ மீது ஊழல் புகார்: ஷியா முஸ்லிம் வஃக்பு வாரியம் நடவடிக்கை

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் ஜிதேந்தர் நாராயண் திவாரி என மதம்மாறிய வசீம் ரிஜ்வீ உள்ளிட்ட ஆறு முத்தவல்லிகள் மீது ஊழல் புகார் எழுந்துள்ளது. இதனால், அவர்கள் அனைவரையும் பதவிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது உ.பி. ஷியா முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியம்.

முஸ்லிம்களில் இரண்டு முக்கியப் பிரிவுகளாக இருப்பது சன்னி மற்றும் ஷியாக்கள். இவர்களில் பெரிய மாநிலமான உபியில் ஷியா பிரிவினர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

ஷியாக்களுக்கான மசூதிகளும், மற்ற சொத்துக்களும் கூட அதிகமாக உள்ளன. இவற்றுக்கு ஒவ்வொரு பகுதிகளுக்காக எனத் தனியாக முத்தவல்லிகளை அமர்த்தி உபியின் ஷியா வஃக்பு வாரியம் நிர்வாகித்து வருகிறது.

இவர்களில் உ.பி.யின் ஆறு முத்தவல்லிகள் சொத்துக்களைப் பராமரிப்பதில் முறைகேடுகள் செய்ததாக ஊழல் புகார் எழுந்திருந்தது. இவற்றை விசாரித்த ஷியா வஃக்பு வாரியத்தினர் அதன் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது குறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் உபி ஷியா வஃக்பு வாரியத்தின் தலைவரான அலி ஜைதி கூறும்போது, ‘‘வஃக்பு சொத்துக்கள் மீது ஊழல் நடைபெற்றதாக பல முத்தவல்லிகள் மீது புகார்கள் வந்திருந்தன.

இதன் விசாரணையில் ஆறு பேர் மீது புகார்கள் உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஏழு முத்தவல்லிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.’’ எனத் தெரிவித்தார்.

உ.பி. ஷியா வஃக்பு வாரியத்தின் முன்னாள் தலைவராக வசீம் ரிஜ்வீ தற்போது இந்துவாக மதம் மாறி தனது பெயரை ஜிதேந்தர் நாராயண் திவாரி மாறியுள்ளார். இதற்கு முன்பாக அவர் உ.பி. ஷியா வஃக்பு வாரியத்தின் கர்பாலா மல்கா ஹஜஹானின் முத்தவல்லியாகவும் இருந்தார்.

இவர் மீதானப் புகார்களும் உறுதி செய்யப்பட்டதால், மதம் மாறிய வசீம் ரிஜ்வீயும் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ருஸ்தம்நகரில் அமைந்துள்ள ஷியாக்களின் தர்காவான ஹஸரத் அப்பாஸ் நிர்வாகத்தின் மீது கடந்த பத்து வருடங்களாக ஊழல் புகார் எழுந்து வந்தது.

இதனால், அந்த தர்காவின் நிர்வாகக்குழுவையும் கலைந்த ஷியா வஃக்பு வாரியம் தர்காவை தனது நேரடிக் கண்காணிப்பில் கொண்டு வந்துள்ளது. இத்துடன் உ.பி. முழுவதிலும் புதிதாக 23 முத்தவல்லிகளையும் ஷியா வஃக்பு வாரியத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.