கடற்படையின் இயக்கம், செயல்பாடு, சாகசங்களைப் பார்வையிட்டார் குடியரசுத் தலைவர் <!– கடற்படையின் இயக்கம், செயல்பாடு, சாகசங்களைப் பார்வையிட்டார… –>

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்தியக் கடற்படையின் வலிமை, ஆற்றல் மற்றும் செயல்பாட்டைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

விடுதலையின் 75ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடற்படையின் வலிமையை ஆய்வு செய்யும் வகையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படைத் தளத்துக்குச் சென்றார். அங்குக் கடற்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

கடற்படையின் ஐஎன்எஸ் சுமித்ரா படகுக்குச் சென்ற குடியரசுத் தலைவருக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கடற்படைத் தளபதி ஹரிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

 இந்தியக் கடற்படையின் 60 கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், 55 விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றின் இயக்கம், செயல்பாடு, சாகசங்களைப் படகில் இருந்தபடியே பார்வையிட்டார்.

 கடற்படையின் வலிமையைக் காட்டும் வகையில் ஐஎன்எஸ் சென்னை, ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் உள்ளிட்ட கப்பல்கள் கடலில் உலவியதைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டார்.

 விமானந்தாங்கிக் கப்பல்களில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர்கள் கடலுக்கு மேலே வான்பரப்பில் பறந்ததையும் குடியரசுத் தலைவர் பார்வையிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.