நாயை விட்டு.. மெர்க்கலை "மிரட்டிய" புடின்.. பயங்கர சேட்டைக்கார ஆளு!

ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் எந்த அளவுக்கு குசும்புக்காரர் என்றார், ஜெர்மன் சான்சலர் ஏஞ்செலா மெர்க்கலை ஒரு முறை நாயை விட்டு “மிரட்டிய” சம்பவத்தை நினைவு கூறலாம்.

புடினுக்கு செல்லப்பிராணிகள் என்றால் ரொம்ப இஷ்டம். குதிரை சவாரி செய்வது, வேட்டை நாயுடன் விளையாடுவது, சிறுத்தையுடன் கொஞ்சிக் குலாவுவது என்று விதம் விதமாக அவரது பொழுது போக்குகள் இருக்கும்.

ஆனால் இதற்கு நேர் மாறானவர்
ஏஞ்செலா மெர்க்கல்
. அவருக்கு நாய் என்றாலே ஆகாது, அலர்ஜி. நாயைக் கண்டாலே காத தூரம் ஓடுபவர். இதற்குக் காரணம் 1995ம் ஆண்டு அவரை ஒரு நாய் கடித்து விட்டது. அது முதலே நாய் என்றால் அவருக்கு அச்சம்.

இந்த நிலையில்தான் கடந்த 2007ம் ஆண்டு ரஷ்யா வந்திருந்தார் மெர்க்கல். புடினின் கோடை கால தங்குமிடமான சோச்சியில் வைத்து அவரது மாளிகையில் புடினை மெர்க்கல் சந்தித்தார். இருவரும் சந்திப்பதற்கு முன்பு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். அப்போதுதான் ஒரு “சம்பவம்” நடந்தது.

பொதுமக்களை சுட்டுக் கொல்கிறதா ரஷ்யா ராணுவம்?.. பதற வைக்கும் புதுத் தகவல்!

அந்த போட்டோ செஷன் நடந்த அறையில், பெரிய சைஸ் கருப்பு நிற லேப்ரடார் நாய் புகுந்தது. அதன் பெயர் கோனி. புடினைப் பார்த்ததும் அவரிடம் போனது. அது அவரது செல்ல நாயாகும். நாயைப் பார்த்த புடின் அதைப் பிடித்து தட்டிக் கொடுத்து அந்தப் பக்கம் போ என்று கூறினார். ஆனால் நாய் போகவில்லை. அப்படியே அந்த அறையை சுற்றிச் சுற்றி வந்தது. மெர்க்கல் அருகே போனது. அவரது கால் அருகே போய் உட்கார்ந்தது.

நாய் தன்னிடம் நெருங்கியபோதெல்லாம் மெர்க்கலின் கண்ணில் ஒரு மிரட்டி தெரிந்தது. அவர் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தார். ஆனால் வெளிக்காட்டவில்லை. அவருக்கு அந்த அறையில் நாய் இருந்தது பிடிக்கவில்லை. புடினின் செயலால் அவர் அதிருப்தி அடைந்தார். இருப்பினும் அதை வெளிப்படுத்த முடியாத நிலை.

ஆனாலும் அவர் விடவில்லை. ரஷ்ய மொழியில், இந்த நாய் பத்திரிகையாளர்களை கடிக்காது என்று நினைக்கிறேன் என்று கூறி கிண்டலடித்து புடினை வாரி விட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தனியாக பேசும்போது, புடின் ஏன் இதுபோல எல்லாம் செய்கிறார் என்று எனக்குப் புரிகிறது. தனது பலவீனத்தை மறைக்க இப்படிச் செய்கிறார். தனது பலவீனத்தைப் பார்த்து அவரே பயப்படுகிறார். ரஷ்யாவிடம் எதுவுமே இல்லை. நல்ல அரசியல் இல்லை, பொருளாதாரம் இல்லை. அவர்களிடம் இருப்பதெல்லாம் இதுதான் என்றும் அவர் கிண்டலடித்திருந்தார்.

துள்ளிக் குதிக்கும் குழந்தைகள்.. கவலைகளற்ற நிம்மதி.. ஹங்கேரியில் அமைதி காணும் உக்ரைன்!

மெர்க்கலை வேண்டும் என்றே மன ரீதியாக டென்ஷனாக்க அப்படி செய்தார் புடின் என்று பலரும் கூறினர். ஆனால் பின்னர் இதை மறுத்தார் புடின். நான் மெர்க்கலைப் பயமுறுத்த அப்படிச் செய்யவில்லை. அது ஒரு அழகிய நாய். அதை அவருக்குக் காட்டவே வரவழைத்தேன். ஆனால் அவருக்கு நாய்கள் பிடிக்காது என்று தெரிந்ததும் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன் என்று கூறினார் புடின்.

புடின் எப்படிப்பட்ட குசும்புக்காரர் என்பதை விட, எதிரிகளை பயமுறுத்த என்னவெல்லாம் செய்யலாம் என்பதையும் தெரிந்து வைத்துள்ள கில்லாடி என்பதையும் இந்த சம்பவத்தை வைத்துப் புரிந்து கொள்ளலாம். இப்படிப்பட்டவரின் ராணுவம்தான் இன்று உக்ரைனை பந்தாடிக் கொண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.