ஆயுதம் இருக்கிறதா என கண்டறியவே சட்டையை கழற்ற வைத்தோம்: ஐகோர்ட்டில் ஜெயக்குமார் பதில்

கள்ள ஓட்டுபோட முயன்றபோது பிடிபட்ட நபர், ஆயுதம் மறைத்து வைத்திருக்கிறாரா என்று கண்டறிவதற்காகவே அவருடைய சட்டையை கழற்ற வைக்கப்பட்டதாகவும் அந்த சட்டை கைகளைக் கட்டப் பயன்படுத்தப்பட்டதாகவும் பின்னர் அந்த நபர் சட்டை இல்லாமல் அழைத்துச் செல்லப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, சென்னையில் கள்ள ஓட்டு போட முயன்று பிடிபட்ட அந்த நபர் மீது 11 கிரிமினல் வழக்குகள் உள்ளதால் அவர் கடுமையான குற்றவாளி என்பதாலும், இடுப்பில் ஆயுதம் வைத்திருப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்ததால், தனது சட்டையை கழற்றுமாறு கட்டாயப்படுத்தினார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, கள்ள ஓட்டு போட முயன்றதாக பிடிபட்ட திமுக நிர்வாகியை சட்டையைக் கழற்றி தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில், முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பிப்ரவரி 19ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயக்குமார் ஜாமீன் கோரி மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஜெயக்குமாரின் ஜாமீன் மனு மார்ச் 3ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

நரேஷ் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்த மனுவில் பதில் அளித்துள்ளார். வாக்குப்பதிவு நாளில், உண்மையில் தான் அந்த நபரை மக்கள் தாக்குவதை தடுத்ததாக ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் தான் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கள்ள ஓட்டு போட முயன்றபோது பிடிபட்ட நபர் நரேஷ் குமாரின் கைகளைக் கட்டுவதற்கு சட்டை பயன்படுத்தப்பட்டதாகவும், அதன்பிறகு அவர் சட்டையில்லாமல் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். பிறகு, அந்த நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். ஆனால், போலீசார், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திமுகவினரை விடுவித்தனர் என்று ஜெயக்குமார் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 43வது பிரிவின்படி, குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒருவரைக் கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைக்க தனி நபர்களுக்கும் அதிகாரம் உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஜெயக்குமாருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் ஜாமீனில் வெளிவர முடியாத ஒரு பிரிவு (506 பகுதி II – குற்றவியல் மிரட்டலுக்கான தண்டனை) மட்டுமே உள்ளது. இருப்பினும், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டிடம் இருந்து ஜாமீன் பெறுவதைத் தடுக்க ஐ.பி.சி பிரிவு 307 (கொலை முயற்சி) பின்னர் சேர்க்கப்பட்டது என்று ஜெயக்குமர் குற்றம் சாட்டியுள்ளார்.

புகார் அளித்த நபர் காயம் ஏதும் இன்றி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்துப் பதிவேட்டில் காயங்களின் தன்மை குறித்து எந்த குறிப்பும் இல்லை என்றும் மனுதாரர் கூறினார். மனுதாரருக்கு ஜாமீன் வழங்குவதைத் தடுக்கவே திமுகவினர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை என்று ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.