வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றுவரும் 90% பேர் இந்திய தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதில்லை.. மத்திய அமைச்சரின் கருத்தால் சர்ச்சை

புதுடெல்லி: வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றுவரும் இந்தியர்களில் 90% பேர் இங்கு இந்திய அரசால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் (Foreign Medical Graduates Examination FMGE) வெற்றி பெறுவதில்லை என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

அதேவேளையில், மருத்துவம் பயில்வதற்காக இந்திய மாணவர்கள் ஏன் அதிகளவில் உக்ரைன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர் என்று விவாதிக்க சரியான தருணம் இது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் அங்கு போர் அதிதீவிரமடைந்துள்ளது. அதனால் அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் தங்களை எப்படியாவது தாயகம் அழைத்துச் செல்லுமாறு கோரி வருகின்றனர். மத்திய அரசும் மிஷன் கங்கா என்ற பெயரில் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் சிலர், தங்களை ரயில்களில் ஏறவிடாமல் உக்ரைன் போலீஸார் தடுப்பதாகக் கூறிவருகின்றனர். அவர்கள் தங்களைத் தாக்குவதாகவும் மைனஸ் டிகிரி பனியில் பல மைல் நடந்து எல்லையை வந்தடைந்தாலும் கூட அண்டை நாட்டுக்குள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி வதைக்கின்றனர் என்று புகார் கூறி வருகின்றனர்.

முன்னதாக நேற்று போர் பதற்றம் உச்சத்தில் உள்ள கார்கிவ் நகரில், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வெளியே சென்ற இந்திய மாணவர் நவீன் சேகரப்பா ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்தார்.

சமூகவலைதளங்களில் விவாதம்: மீட்புப் பணிகளை மத்திய அரசு மெத்தனமான மெதுவாகக் கையாள்வதாக எதிர்க்கட்சிக்கள் விமர்சித்து வரும் சூழலில் சமூக ஊடகங்களில் சிலர் முன் கூட்டியே எச்சரித்தும் இந்திய மாணவர்கள் அங்கிருந்து புறப்படுவதில் மெத்தனம் காட்டினர் என்று கூறிவருகின்றனர். இன்னும் சிலர் இந்திய மருத்துவ தகுதித் தேர்வுகளில் தோற்றுப் போபவர்கள் தான் உக்ரைன் செல்கின்றனர் என்று விமர்சித்துள்ளனர். வேறு சிலரோ, இந்தியாவில் மருத்துவக் கனவுள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவக் கல்லூரிகள் இல்லை அதனால் தான் வெளிநாடு செல்கின்றனர் என விமர்சித்துள்ளனர்.

விமர்சனங்களுக்கு மத்தியில் உக்ரைனில் எங்கெல்லாம் மாணவர்கள், இந்தியர்கள் வெளியேறுவதில் சிக்கல் இல்லை என்ற சூழல் நிலவுகிறதோ அங்கெல்லாம் இருந்து மாணவர்களை மீட்கும் பணி நடைபெற்றுவருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.