மத்திய கலாசார நிதியத்தின் வரைவு விதிகள் கௌரவ பிரதமரிடம் கையளிப்பு

1980 ஆம் ஆண்டு 57 ஆம் இலக்க மத்திய கலாசார நிதியச் சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள வரைவு விதிகள் குழுவின் தலைவர் ஜி.எல்.டபிள்யூ.சமரசிங்க அவர்கள் உள்ளிட்ட குழு உறுப்பினர்களினால் நேற்று (02) அலரிமாளிகையில் வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.


புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் கௌரவ பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவினால் 2020 செப்டெம்பர் 16 ஆம் திகதி குறித்த குழு நியமிக்கப்பட்டது.

கடந்த அரசாங்கத்தின் போது குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் பாரியளவில் நிதி துஷ்பிரயோகம் இடம்பெற்றமை போன்ற நிதி மோசடிகள் மேலும் இடம்பெறுவதனை தடுப்பதற்கு இந்த விதிகளை அறிமுகப்படுத்துவது மிகவும் அவசியமானது என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார். விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் விருப்பத்திற்கேற்ப பணம் செலவழிப்பதை மட்டுப்படுத்துவதற்கான முறைமையொன்றை உருவாக்குவது நாட்டுக்கு நன்மை பயக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

பிரதமரின் ஆலோசகர் (பொது உறவுகள்) ஜி.எல்.டபிள்யூ.சமரசிங்க அவர்கள் இக்குழுவின் தலைவராக விளங்குவதுடன், புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் விஜித நந்த குமார, சட்டத்தரணி கணேஷ் தர்மவர்தன மற்றும் மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் (நிர்வாகம் மற்றும் மனித அபிவிருத்தி) டபிள்யூ. தர்மதாச ஆகியோர் இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக காணப்படுகின்றனர்.

பிரதமர் ஊடக பிரிவு

மத்திய கலாசார நிதியம் ஸ்தாபிக்கப்பட்டது முதல் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் மற்றும் அதன் கீழ் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மற்றும் அதற்கு இணையாக செயல்படும் தொல்பொருள் திணைக்களத்தின் தொடர்புடைய சட்டங்கள் மற்றும் விதிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த வரைவு விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

தொல்பொருள் ஆணையாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க, தொல்பொருள் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திஸாநாயக்க, உலக பாரம்பரிய சர்வதேச ஆலோசகர் கலாநிதி காமினி விஜேசூரிய, முன்னாள் தொல்பொருள் ஆணையாளர் கலாநிதி நிமல் பெரேரா மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட உதவிச் செயலாளர் நந்தனி பெர்னாண்டோ ஆகியோர் இதற்கு விசேட ஒத்துழைப்பு நல்கியுள்ளனர்.

நிதி மற்றும் பிற விடயங்கள் குறித்து செயற்படும்போது அதன் பணிப்பாளர் நாயகம் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிக்கு உதவியாக பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரையின் பேரில் தலைமை நிர்வாக அதிகாரியினால் ஒரு நிபுணர் குழு நியமிக்கப்படும். அது அவ்வப்போது பரிசீலனை செய்யப்பட்டு, திருத்தங்கள் தேவைப்பட்டால் அவ்வாறு செய்வதற்கான தலைமை நிர்வாக அதிகாரிக்கான அதிகாரம் உள்ளிட்ட 16 முக்கிய விதிகள் இந்த வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, குழுத் தலைவர் பிரதமரின் ஆலோசகர் (பொது உறவுகள்) ஜி.எல்.டபிள்யூ.சமரசிங்க உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.