22 ரஷ்ய கோடீஸ்வரர்களுக்கு தடை விதிக்க மறுக்கும் பிரித்தானியா: போரிஸ் ஜோன்சன் மீது கடும் விமர்சனம்


ரஷ்ய கோடீஸ்வரர்கள் மீது பொருளாதார தடைகள் விதிக்க பிரித்தானியா தடுமாறி வரும் நிலையில், போரிஸ் ஜோன்சன் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு நெருக்கமான கோடீஸ்வரர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது உக்ரைன் விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கடும் நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகிறது.

இதுவரை 702 நபர்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார தடைகள் விதித்துள்ளது. இதில் ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்களும், புடினுக்கு தொடர்புடைய 50 நிறுவனங்களும் உட்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பிரித்தானியா தரப்பில் இதுவரை 11 ரஷ்ய கோடீஸ்வரர்கள் மீதே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, ரஷ்யா மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கவும் பிரித்தானியா கோரிக்கை வைத்துள்ளது.

இதனிடையே, பிரதமர் போரிஸ் ஜோன்சன் மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போருக்கு நடுவில் ரஷ்ய கோடீஸ்வரர்களிடம் இருந்து ஆதாயம் தேடுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரஷ்ய கோடீஸ்வரர்கள் மீதான நடவடிக்கைகள் கண்டிப்பாக தொடரும் எனவும், ஆனால் சிறிது காலதாமதம் ஏற்படும் என அமைச்சர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதனிடையே ரஷ்ய கோடீஸ்வரர் ஒருவருக்கு சொந்தமான 448 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான படகு ஒன்று ஜேர்மன் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அதே அளவுக்கான நடவடிக்கைகள் பிரித்தானிய நிர்வாகமும் முன்னெடுக்க வேண்டும் என்ற அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

போரிஸ் நிர்வாகத்தின் மெத்தனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியமும் விமர்சனம் முன்வைத்துள்ளது.
பொருளாதார தடைகள் விதிக்க பிரித்தானியா தாமதப்படுத்தும் ஒவ்வொரு மணி நேரமும், ரஷ்ய கோடீஸ்வரர்கள் தங்கள் பணத்தை நாட்டில் இருந்து வெளியேற்ற சாதகமாக அமையும் என்றே குற்றஞ்சாட்டியுள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.