“இருக்கும் இடத்திலிருந்து வெளியே வரவேண்டாம்”- இந்திய மாணவர்களுக்கு வெளியுறவுத்துறை அறிவுரை

உக்ரைனில் தங்கியிருக்கும் இடங்களிலிருந்து மாணவர்கள் வெளியே வர வேண்டாம் என்று இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்யா கடந்த 9 நாட்களாக தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. கெர்சன், எனர்கோடர், மிக்கலேவ் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றிய ரஷ்யப் படைகள், கிழக்குப் பகுதியில் உள்ள நகரங்களை கைப்பற்றவும் முயன்று வருகின்றன. இதன் காரணமாக கிழக்குப் பகுதிகளில் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்களை மீட்பதில் சிக்கல் நிலவியது. இதையடுத்து மீட்புப் பணிக்காக போர் நிறுத்தம் செய்யுமாறு இந்தியா வலியுறுத்தியிருந்தது.
அதே நேரம் பெலாரஸில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின்போது, மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளவும், பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றவும், இருதரப்பும் ஒப்புக் கொண்டன. இதைத் தொடர்ந்து உக்ரைனில் உள்ள மரியபோல், வோல்னோவாக்கா ஆகிய இரு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.
image
போர் பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க, மனிதாபிமான அடிப்படையில் இந்த தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டிருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அதன்படி, உக்ரைனில் இந்திய நேரப்படி பகல் 11.30 மணியில் இருந்து தாக்குதல் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைனில் தங்கியிருக்கும் இடங்களிலிருந்து மாணவர்கள் வெளியே வர வேண்டாம் என்று இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சுமி நகரில் இருந்து இந்திய மாணவர்கள், உயிரை பணயம் வைத்து எல்லை நோக்கி நடந்தே செல்லும் நிலையில் இந்த அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது.மாணவர்களுடன் அமைச்சகமும், இந்திய தூதரகமும் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
image
முன்னதாக, உக்ரைனில் சிக்கியிருக்கும் தமிழக மாணவர்களை மீட்பது தொடர்பாக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்த குழு மத்திய வெளியறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து, உக்ரைனில் உள்ள அண்டை நாடுகளுக்கு செல்வது குறித்து ஆலோசித்தது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருச்சி சிவா, நாளைக்குள் அனைத்து மாணவர்களும் மீட்கப்பட்டு விடுவார்கள் என்றும், இதற்காக கூடுதல் விமானங்களை இயக்கப் போவதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்திருப்பதாக கூறினார். உக்ரைனில் இருக்கும் தூதரக அதிகாரிகள் இந்தி மொழியில் மட்டுமே பேசுவதால், தமிழக மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகி இருப்பதாகவும், எனவே மொழி பிரச்னையை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.