உக்ரைன் – தியாக தேசத்தின் வரலாறு- பகுதி 4: ரஷ்யாவைத் தனிமைப்படுத்துவது உலகத்துக்கு நல்லதா?

பள்ளிக்கூடத்தில் முரட்டுத்தனமாக மற்றவர்களுடன் சண்டை போடும் பையனை, ”அவன்கூட யாரும் பேசக்கூடாது” என்று ஒதுக்கி வைப்பார் டீச்சர். அந்த டீச்சரின் டெக்னிக்கையே உலக நாடுகள் கையாள்கின்றன. எந்தக் கட்டுப்பாடுகளையும் மதிக்காமல் ஆயுதங்களை உற்பத்தி செய்கிற, அண்டை நாடுகளுடன் சண்டையிடுகிற தேசங்கள் மீது பொருளாதாரத் தடை உட்பட பல்வேறு தடைகளை விதித்துத் தனிமைப்படுத்துகின்றன. வட கொரியாவை இப்படித்தான் தனிமைப்படுத்தினார்கள். அந்த நாட்டின் அதிபர் கிம், தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி அமெரிக்காவையே மிரட்டிக் கொண்டிருக்கிறார். இப்போது உக்ரைன்மீது போர் தொடுத்த ரஷ்யாவையும் இப்படித் தனிமைப்படுத்த முயற்சி நடக்கிறது. வட கொரியா என்ற குட்டி தேசத்தையே கண்காணிக்க முடியாமல் உலகம் தவிக்கிறது. உலகிலேயே அதிக நிலப்பரப்பு கொண்ட, உலகிலேயே அதிக அணு ஆயுதங்கள் வைத்திருக்கிற ரஷ்யாவைத் தனிமைப்படுத்துவது சாத்தியமா? தாங்கள் செய்த சமாதான முயற்சிகளையும் மீறி போரில் இறங்கியதால், ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா. கனடாவும், ஜப்பானும், ஐரோப்பிய நாடுகளும் இதேபோல செய்தன. இதைத் தாண்டி பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் கூட ரஷ்யாவுக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன; ரஷ்யாவிலிருந்து வெளியேறியுள்ளன. இதுவரை எந்தப் போரிலும், எந்த நாட்டின் மீதும் இத்தனை வேகத்திலும், இவ்வளவு அதிகமாகவும் தடைகள் விதிக்கப்பட்டது இல்லை. அந்தத் தடைகளின் பட்டியல் நீளமானது.

* போர் ஆரம்பித்த உடனே முதலில் ரஷ்யா மீது பாய்ந்தது பொருளாதாரத் தடை. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அவரின் முக்கிய அமைச்சர்கள், அரசுக்கு ஆதரவான தொழிலதிபர்கள் என்று பலரது குடும்பத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் அவர்களின் சொத்துகள் முடக்கப்பட்டன. பிற நாடுகளின் வங்கிகளில் இருக்கும் பணத்தை அவர்கள் எடுக்க முடியாது. இந்தத் தடைகளை மீறி கிரிப்டோ கரன்சிகளில் பரிவர்த்தனை செய்ய வாய்ப்பிருக்கிறது என்பதால், அதையும் முடக்கிவிட்டனர்.

* ரஷ்ய அரசுக்கு ஆதரவாக இருக்கும் தொழிலதிபர்களின் கப்பல்கள், சொகுசுப் படகுகள் போன்றவையும் ஐரோப்பிய துறைமுகங்களில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டன. இங்கிலீஷ் கால்பந்து கிளப்பில் செல்சியா அணிக்கு ரஷ்யக் கோடீஸ்வரர் ரோமன் அப்ரமோவிக் உரிமையாளர். 19 ஆண்டுகளாகத் தன் வசமிருக்கும் அந்த அணியை இப்போது அவர் விற்கப் போகிறார். பொருளாதாரத் தடை காரணமாக அவரால் அந்த அணியை நடத்த முடியாது என்பதே காரணம்.

புடின்

* இதுபோன்ற பொருளாதாரத் தடைகள் எப்போதும் பணக்காரர்களை மட்டுமே முடக்கும். ஆனால், ஒட்டுமொத்தமாக ரஷ்யாவையே ஸ்தம்பிக்க வைக்கும் இன்னொரு விஷயத்தையும் செய்தன அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும்! ரஷ்யாவின் பெரிய பொருளாதார பலமே, எண்ணெய் ஏற்றுமதி மூலமாகக் கிடைக்கும் அந்நியச் செலாவணிதான். கிட்டத்தட்ட நம் இந்திய மதிப்பில் 46 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அந்நியச் செலாவணி கையிருப்பு வைத்திருக்கிறது ரஷ்யா. அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் சேர்ந்து, ரஷ்யாவின் மத்திய வங்கி அதைப் பயன்படுத்த முடியாதபடி செய்துவிட்டன. இதனால் ரஷ்ய நாணயமான ரூபிளின் மதிப்பு கடுமையாக சரிந்தது. எல்லாப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்திருக்கிறது. உக்ரைன் மக்கள் ரயிலில் ஏறி நாட்டைவிட்டு தப்பித்து ஓடுவதற்காக வரிசையில் நிற்கிறார்கள் என்றால், ரஷ்யர்கள் ஏ.டி.எம் இயந்திரங்களின் முன்பு வரிசையில் நிற்கிறார்கள்.

* ஆயுத பலத்தில் உலகையே மிரட்டும் அளவுக்கு ரஷ்யா இருந்தாலும், அதனிடம் பொருளாதார பலம் கிடையாது. அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது, பத்தில் ஒரு பங்கு அளவுக்கே ரஷ்யாவின் பொருளாதாரம் உள்ளது. தடைகளால் அது இன்னும் சுருங்கிவிட்டது.

* உலக நாடுகளின் வங்கிகள் ‘ஸ்விஃப்ட்’ எனப்படும் பரிவர்த்தனை மூலமே ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கின்றன. உலக வங்கியில் நம் அரசு கடன் வாங்கினால், அந்தப் பணம் அங்கிருந்து நம் பாரத ஸ்டேட் வங்கி கணக்கிற்கு நிமிடங்களில் வந்துவிடும். ஸ்விஃப்ட் நெட்வொர்க் இதை எளிதாக்கியுள்ளது. உலகெங்கும் உள்ள 11 ஆயிரம் வங்கிகள் இந்த நெட்வொர்க் மூலம் இணைந்துள்ளன. ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான டாலர்களில் பணப்பரிமாற்றம் இதன் மூலம் நிகழ்கிறது. இந்த நெட்வொர்க்கிலிருந்து இப்போது முக்கியமான ரஷ்ய வங்கிகளை விலக்கி வைத்துவிட்டனர். ஒட்டுமொத்தமாக ரஷ்யாவையே இதிலிருந்து வெளியேற்ற அமெரிக்கா விரும்பியது. ஆனால், ‘அப்படிச் செய்வது எங்கள் மீது போர் தொடுப்பது போன்ற செயல்’ என்று ரஷ்யா கடுமையாக எச்சரிக்கை செய்தது. அதனால், பெரிய வங்கிகளுக்கு மட்டும் இப்போது தடை போட்டுள்ளனர்.

பரிவர்த்தனை

* பல நாடுகள் தங்கள் வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்குத் தடை விதித்துவிட்டன. பதிலுக்கு, அந்த நாடுகளின் விமானங்கள் ரஷ்யா வழியே பறப்பதற்கு ரஷ்ய அரசும் தடை போட்டுவிட்டது. இதனால் ரஷ்யர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது சிரமமாகியுள்ளது. ரஷ்ய வான்வழியே செல்லாமல் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியிருப்பதால், மற்ற நாடுகளின் விமானக் கட்டணங்களும் உயர்ந்துள்ளன.

Ukraine

* உலகெங்கும் சரக்குப் போக்குவரத்து அதிகம் நடப்பது கடல்வழியேதான்! பெரிய பெரிய கன்டெய்னர்களில் பொருட்களை அடுக்கி, கப்பல்கள் எடுத்துச் செல்கின்றன. கார்கோ எனப்படும் இந்த கன்டெய்னர் கப்பல் போக்குவரத்தில் மெர்ஸ்க், எம்.எஸ்.சி, ஹேபக் லாய்ட், ஓஷன் நெட்வொர்க் எக்ஸ்பிரஸ் ஆகிய நான்கு நிறுவனங்கள் பெரியவை. ஒட்டுமொத்த கடல்வழி சரக்குப் போக்குவரத்தில் இவை மட்டுமே பாதியளவுக்குச் செய்கின்றன. இந்த நான்கு நிறுவனங்களும் இனி ரஷ்யத் துறைமுகங்களுக்குச் செல்ல மாட்டோம் என அறிவித்துள்ளன. இதனால் ஏற்றுமதி, இறக்குமதி இரண்டுமே பாதிக்கப்படும்.

* போயிங், ஏர்பஸ் ஆகிய இரண்டு பெரிய விமானத் தயாரிப்பு நிறுவனங்களும் ரஷ்யாவுக்கு உதிரி பாகங்கள் மற்றும் தொழில்நுட்ப சேவைகளை இனி வழங்க மாட்டோம் என அறிவித்துள்ளன. ரஷ்யாவில் இயங்கும் பெரும்பாலான விமானங்கள் இந்த நிறுவனங்களின் தயாரிப்புகள்தான். எனவே, ரஷ்யாவின் விமான சேவை கடுமையாக பாதிக்கப்படலாம்.

* கார் உற்பத்தி மற்றும் உதிரி பாகங்கள் சேவையிலும் இனி வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு உதவாது. இதனால் ரஷ்யாவின் கார் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்படலாம்.

* செமி கண்டக்டர் உள்ளிட்ட எல்லா தொழில்நுட்ப பரிவர்த்தனைகளையும் நிறுத்த உள்ளதாக அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் அறிவித்துள்ளன. இதனால் ரஷ்யாவில் ராக்கெட், போர் விமானம், ஏவுகணை, டாங்கி, டிரோன், ஸ்மார்ட் போன், டெலிவிஷன் உள்ளிட்ட பெரும்பாலான தயாரிப்புகள் பாதிக்கப்படும். எண்ணெய் ஏற்றுமதிக்கு அடுத்தபடியாக ரஷ்யாவுக்கு பெரும் வருமானம் கொடுப்பது ஆயுத ஏற்றுமதிதான். அது இனி முடங்கிப்போகும்.

* அமெரிக்காவுக்கு நிகராக விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தும் ரஷ்யா இனி விண்ணில் ராக்கெட் செலுத்தத் தடுமாறக்கூடும். விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி ஓடத்தை அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்தே நிர்வகிக்கின்றன. விண்வெளி வீரர்கள் இரு நாடுகளிலிருந்தும் அங்கு செல்கிறார்கள். அதன் சுற்றுப்பாதை மற்றும் இருப்பிடத்தைக் கட்டுப்படுத்தும் கட்டமைப்பு ரஷ்யாவில் உள்ளது. ”இந்தத் தடைகளால் ரஷ்யா பாதிக்கப்படும். இதன் விளைவாக சர்வதேச விண்வெளி நிலையம் கட்டுப்பாட்டை இழந்து இந்தியாவிலோ, சீனாவிலோ விழும்” என்று எச்சரித்திருக்கிறார், ரஷ்ய விண்வெளி அமைப்பான ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் டிமிட்ரி ரோகோசின்.

Russia – Ukraine war

* கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் மற்றும் டி.வி நிறுவனங்கள் பலவும் ரஷ்யாவில் தங்கள் விற்பனை மற்றும் சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துவிட்டன. இன்டெல் கார்ப்பரேஷன், ஹெச்.பி., ஆப்பிள், மைக்ரோசாப்ட், சாம்சங் ஆகியவை இப்படிக் கூறியுள்ளன. எனவே, எளிய மக்களின் பொழுதுபோக்காக இருக்கும் டி.வி-யே அங்கு ஆடம்பரப் பொருளாக மாறிவிடும்.

* இரண்டே இரண்டு விஷயங்கள் மட்டுமே நடக்காதது ரஷ்யாவுக்கு ஆறுதல். உலகெங்கும் இன்டர்நெட் சேவையைப் பராமரிப்பது ஐகேன் எனப்படும் Internet Corporation for Assigned Names and Numbers (ICANN) அமைப்பு. இந்த சேவை நெட்வொர்க்கிலிருந்து ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும் என்று உக்ரைன் கோரியது. அப்படிச் செய்தால் ரஷ்யாவில் இணையதளங்கள் செயல்படாது; ஸ்மார்ட் போன்கள் வேலை செய்யாது. இணையம் சார்ந்த அனைத்து சேவைகளும் ஸ்தம்பித்துவிடும். ஆனால், ‘இப்படி ஒரு நாட்டை வெளியேற்றுவது சாத்தியமில்லை’ என்று மறுத்துவிட்டது ஐகேன் அமைப்பு.

* இதேபோல ‘உக்ரைனின் வான்வெளியை மூடுவதற்கு நேட்டோ அமைப்பு உத்தரவிட வேண்டும்’ என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கேட்டார். இப்படி உத்தரவு போட்டால், அதன்பின் உக்ரைன் வான்வெளியை பாதுகாக்க வேண்டியது நேட்டோவின் கடமையாகிவிடும். உக்ரைனுக்குள் ரஷ்யப் போர் விமானங்கள் பறந்தால், அவற்றை சுட்டு வீழ்த்த நேட்டோ நாடுகளின் விமானங்கள் போக வேண்டும். இது ஒட்டுமொத்தமாக அமெரிக்காவையும் ஐரோப்பிய நாடுகளையும் ரஷ்யாவுக்கு எதிரான போரில் இழுத்துவிடும் உத்தி என்பதைப் புரிந்துகொண்ட நேட்டோ, இதற்கு மறுத்துவிட்டது. ”உங்களால் இனி யாரைப் பாதுகாக்க முடியும்? நீங்கள் உண்மையில் நேட்டோவில் உள்ள நாடுகளையாவது பாதுகாப்பீர்களா?” என்று இதைக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் ஜெலன்ஸ்கி.

Russia – Ukraine war

கியூபா, லிபியா, வட கொரியா போன்ற குட்டி நாடுகளை இதுபோன்ற தடைகள் வழிக்குக் கொண்டு வந்துவிடும். ரஷ்யா என்ற பெரிய நாட்டை இது என்ன செய்யும் என்பதே மில்லியன் டாலர் கேள்வி. ‘தடைகள் காரணமாக, இதுவரை அனுபவித்து வந்த வசதிகள் பறிபோனால் மக்கள் கிளர்ந்து எழுவார்கள்’ என்று நம்புகிறது மேற்கத்திய உலகம். ஆனால், சீனாவின் உதவியுடன் பல விஷயங்களை ரஷ்யா சமாளித்துவிடும் என்பதே நிலைமை. இரண்டு நாடுகளுக்கும் இடையே எளிதான எல்லை வர்த்தகம் ஏற்கெனவே நடப்பதால், இதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. இந்த தனிமைப்படுத்தல் முயற்சி காரணமாக ரஷ்யாவும் சீனாவும் இன்னும் நெருக்கமாகும் சூழலை அமெரிக்கா ஏற்படுத்திக் கொடுக்கிறது என்பதே யதார்த்தம். எப்படிப் பார்த்தாலும் இது உலகத்துக்கு நல்லதல்ல.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.