உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு 6-ம் கட்ட தேர்தலில் 5 மணி வரை 53.31% வாக்குப்பதிவு

லக்னோ: உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு நேற்று நடந்த 6-வது கட்ட தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 53.31 சதவீத வாக்குகள் பதிவாயின.

உத்தர பிரதேச சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கு பிப்ரவரி 10-ம்தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல்கள் நடந்து வருகின்றன. நேற்று 6-வதுகட்டமாக முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடும் கோரக்பூர் நகர்புறம், மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு போட்டியிடும் தம்குஹி ராஜ் தொகுதிகள் உட்பட 10 மாவட்டங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.

முதல்வர் ஆதித்யநாத்தை எதிர்த்து சமாஜ்வாதி கட்சி சார்பில் மறைந்த முன்னாள் அமைச்சரும் பாஜக முன்னாள் தலைவருமான உபேந்திர தத் சுக்லாவின் மனைவி, ஆசாத் சமாஜ் கட்சியின் நிறுவனர் சந்திரசேகர் ஆசாத் ஆகியோர் போட்டியிட்டனர். ஆதித்யநாத் அமைச்சரவையில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா, பசில்நகர் தொகுதியில் போட்டியிட்டார். பன்ஸ்தி தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராம் கோவிந்த் சவுத்ரி போட்டியிட்டார். மேலும், மாநில அமைச்சர் சூர்யபிரதாப் ஷஹி, சதீஷ் சந்திர திவிவேதி, ஜெய்பிரதாப் சிங், ஸ்ரீராம் சவுகான், ஜெய்பிரகாஷ் நிஷாத் ஆகியோர் நேற்றைய தேர்தலை சந்தித்தனர்.

நேற்றைய தேர்தலில் 676 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசைகளில் காத் திருந்து வாக்களித்தனர். முதல்வர் ஆதித்ய நாத் கோரக்பூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். ஆரம்பக் கல்வித்துறை அமைச்சர் சதீஷ் திவிவேதி, எதிர்க்கட்சித் தலைவர் ராம் கோவிந்த் சவுத்ரி, சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் ஆகியோர் வாக்களித்தனர்.

கோரக்பூரில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் யோகி ஆதித்ய நாத், ‘‘தேர்தலில் 80 சதவீத வாக்குகளை பாஜக பெற்று வெற்றிபெறும். மீதமுள்ள 20 சதவீத வாக்குகளை எதிர்க்கட்சிகள் பிரித்துக் கொள்ளும். மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும். பாஜக மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்’’ என்றார்.

நேற்றைய தேர்தல் பெரிய அளவில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி அமைதி யாக நடந்து முடிந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறை வடைந்தது.

மாலை 5 மணி நிலவரப்படி 53.31 சதவீத வாக்குகள் பதிவா யின. கடைசி ஒரு மணி நேரம் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அந்த நேரத்தில் பல தொகுதிகளில் வாக்காளர்கள் சிலர் வாக்களித்தனர். 7-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வரும் 7-ம் தேதி நடக்கிறது. 10-ம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு கள் வெளியாகின்றன.

– பிடிஐ

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.